அரியலூரில் 40ஆண்டுகால சேவைக்கு - தனது இறுதிசடங்கில் மரக்கன்று வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்
மரக்கன்றுகளை வளர்ப்பதே அரிதாக உள்ள நிலையில் தன்னுடைய வாழ்நாளில் 40 ஆண்டு காலங்களாக ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வளர்த்து வந்துள்ளார் கருப்பையா.
கடந்த சனிக்கிழமையன்று (13.03.2021)அவரது இறுதிசடங்கில் நன்றி செய்யும்விதமாக ஆயிரம் மரக்கன்றுகளை வந்தவர்கள் அனைவருக்கும் அளித்து அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் அக்கிராமவாசிகள்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா அப்பகுதி மக்கள் இவரை "அரியலூர் மரமனிதன்" என்றே அழைக்கின்றனர் .
40 ஆண்டு காலமாக ஆயிரம் மரக்கன்றுகளை சொந்த செலவில் பராமரித்து நீர்நிலை ஓரங்களிலும் அரசு அலுவலகங்களிலும் பொது மக்களுக்கு அளித்து வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, தர்மபுரி பெரம்பலூர் ,அரியலூர் ஆகிய சுற்றுவட்டார மாவட்டங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்.
இவரை பற்றி அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்க சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது,நாங்கள் அவரை அரியலூர் மரமனிதன் என்றுதான் அழைப்போம் .அவருக்கு 91 வயது இருக்கும் இருப்பினும் அவர் மரங்களை நட்டு வளர்ப்பதிலும் மரக்கன்றுகள் பிறருக்கு வழங்கியும் வாழ்ந்து கொண்டிருந்தார் .
எங்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். அவருக்கு நன்றி செலுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவருடைய இறுதி நாளில் பங்கெடுத்த அனைவருக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினோம் .இதைவிட அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக வேறு எதுவும் இருக்காது என நாங்கள் கருதினோம் .
அவர் மரபு சார்ந்த மரக்கன்றுகளை மட்டுமே வளர்ப்பார். புளிய மரம், வேப்ப மரம்,புங்கமரம் போன்றவற்றையே அதிகம் வளர்த்து எல்லோருக்கும் கொடுத்தார்.அவரிடம் மிக முக்கிய குணங்களில் ஒன்று ஒருபோதும் யாரிடமும் இலவசமாக விதைகளையும் மரக்கன்றுகளையும் வாங்கியது இல்லை.தனக்கு கிடைத்த வருமானத்தில் இருந்து வாங்கியதாக இருக்க வேண்டும் என்றும் சொல்வார் .
இந்த நிகழ்வை பற்றி கருப்பையா அவர்களின் மகன் செங்கமலம் தன்னுடைய தந்தை செய்து வந்த இந்த செயலை நானும் தொடர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார். தந்தை செய்ததின் பலன் என்னவென்று அப்போது எங்களுக்கு புரியவில்லை இன்றைய நிகழ்வுகள் எங்கள் அனைவர் மனதிலும் ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நிகழ்வு நமக்கு நம்மாழ்வாரின் ஒரு வரியைத்தான் நினைவு கூறுகிறது "மரங்களை நட்டு வையுங்கள் அரசு அலுவலர்களுக்கு கிடைக்கும் ஓய்வு ஊதியம் போல் விவசாயிகளுக்கு கடைசி காலத்தில் இந்த மரங்கள் அமையும் என்பார்" கருப்பையாவின் இறுதி பயணத்தில் உண்மையானது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU