காந்தி மார்க்கெட் தற்காலிக திறப்பு - சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!

காந்தி மார்க்கெட் தற்காலிக திறப்பு - சுத்தம் செய்யும் பணி தொடக்கம்!

காந்தி மார்க்கெட் தற்காலிகமாக திறப்பதற்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று காலை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் தற்காலிகமாக மார்க்கெட்டை இன்று திறந்து வைத்தனர்.

Advertisement

காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை என 2500 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட் கூட்டத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் 77. 6 கோடி ரூபாய் செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது.

இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் காந்தி மார்க்கெட்டால் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்ற போதுமான இடவசதி உள்ளது.

இதனால் காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் காந்தி மார்க்கெட்டை செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது இருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி, காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட் வியாபாரிகளிடம் கலந்து ஆலோசித்து கட்டப்பட்டதா? அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசு தரப்பிலும்,

கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும்? என வியாபாரிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மார்க்கெட் மீண்டும் திறக்க ஒத்துழைப்பு வழங்கிய முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் அரசு அதிகாரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில்... தற்போது மார்க்கெட் இன்று தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதமாக காலமாக மார்க்கெட் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாளை இரவு முதல் கடைகள் செயல்படும். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவார்கள், எனவே மீண்டும் மார்க்கெட் தொடர்வது வியாபாரிகள் கையில்தான் உள்ளது, எனவே அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது பொன்மலை ஜீ கார்னரில் செயல்பட்டு வரும் மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.