தனி வட்டாட்சியரை அடியாட்களுடன் தாக்க முயற்சி செய்த அரசு மருத்துவர் - காவல்துறை அலட்சியம்

தனி வட்டாட்சியரை அடியாட்களுடன் தாக்க முயற்சி செய்த அரசு மருத்துவர் - காவல்துறை அலட்சியம்

தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கப்படும் என தெரிவித்து இதுவரை தமிழகத்தில் பல இடங்களில் கோவில் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து இருக்கும் ஆக்கிரமிப்பு காரர்களிடமிருந்து அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய் சொத்துகளை மீட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருள்மிகு பிடாரி காவல்தாய் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக துறையூர் - திருச்சி சாலை முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகே 12 ஏக்கர் 98 சென்ட் நிலம் உள்ளது. 

இந்த நிலத்தை பெரம்பலூர் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிலைத்துறை தனி வட்டாட்சியர் பிரகாசம் மற்றும் கோயில் செயல் அலுவலர் வேணுகோபால் கோவில் நிலத்தை மீட்பதற்காக இன்று அந்த பகுதியிலேயே அறிவிப்பு பலகை வைக்க சென்றுள்ளார்.

அப்போது அறிவிப்பு பலகையை வைத்த உடனே துறையூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் குமார் என்பவர் அடியாட்களுடன் வந்து அறிவிப்பு பலகை வைக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தனி வட்டாட்சியர் பிரகாசம் கோவில் நிலத்தை மீட்பதற்காக தான் வந்துள்ளோம். இதனால் இந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க உள்ளோம் என அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அரசு மருத்துவர் குமார் அடியாட்களுடன் தனி வட்டாட்சியரை தாக்க முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து அறநிலைத்துறை தனி வட்டாட்சியர் பிரகாசம் துறையூர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் பாதுகாப்பு கேட்டு நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் பாதுகாப்பிற்காக போலீசார் வரவில்லை என தனி வட்டாட்சியர் பிரகாசம் குற்றம் சாட்டுகிறார்.

கோவில் நிலத்தை மீட்பதற்காக தனி வட்டாட்சியர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், காவலர்கள் பாதுகாப்பு கொடுக்காமல் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கொடுக்காத துறையூர் காவல் நிலையத்தின் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision