உலகை ரசிக்க கையில் கேமராக்கள் போதும் கால இயந்திரங்கள் தேவையில்லை - தேசிய கேமரா தினம்
தடி எடுத்த எல்லோரும் தண்டல்காரன் ஆகிவிட முடியாது என்பார்கள். ஆனால் கேமரா வைத்திருக்கிற எல்லோரும் புகைப்படக்காரர் ஆகிவிடுகிறார்கள். திருமணம் போன்ற விசேஷ வீடுகளில் யார் புகைப்படம் எடுப்பவர் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமமாய் இருக்கிறது. புகைப்படக்கலையைப் பொறுத்தவரை பிலிம் ரோலில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதே மிகப் பெரிய புரட்சி தான்.
புகைப்படத் துறையில் பயணிக்கும் சகாயராஜ் கேமராவோடு, அவரின் வாழ்க்கை பயணம் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களை புன்னகையோடு நம்மோடு பகிர்ந்தவை... இந்த துறையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னிடம் கேட்டால் அதற்கான விடை என்னிடம் இல்லை. இது ஒரு மாய உலகம் இந்த மாய உலகத்தில் புதிது புதிதாக ஒன்று உருவாகி கொண்டிருக்குமே தவிர இதில் மாயை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இன்றைக்கு ஏராளமானோர் இந்த துறையை தேர்ந்தெடுக்கின்றனர். கவிதை எழுதுவதற்கும் கட்டுரை எழுதுவதற்கு தான் ஆட்கள் குறைவே ஆனால் புகைப்படம் எடுப்பதற்கும் அதனை ரசிப்பதற்கும் கோடான கோடி மக்கள் இருக்கின்றனர். என்னுடைய தொடக்கப்புள்ளி கிராமத்து வாழ்க்கை. சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் மின்னலில் படம் பிடித்த நான் கேமராவில் படம் பிடிக்க வேண்டுமென்று எட்டாம் வகுப்பில் தொடங்கிய இந்த கேமரா மீதான காதல் இத்தனை ஆண்டுகள் என்னை இதனோடே பயணிக்க வைத்திருக்கிறது.
இன்றைக்கு எத்தனையோ மாணவர்களுக்கு போட்டோகிராபி பற்றியும், கேமிராவை பற்றியும் கற்பித்து வருகிறேன். இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதியாக நான் கருதுவது கலையின் மீது தீராத காதலும் பொறுமையும் தான். இந்தத் துறையில் தனக்கென தனித்துவமத்தை தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்வதற்கு நீண்டதொரு பயணம் எடுக்கும் அதற்கு பொருளாதார ரீதியாகவும் நம் தயாராக இருத்தல் அவசியமானது. அதேசமயம் இந்த கலையின் மீதான காதல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஒருநாள் கண்டிப்பாக நமக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும். இன்றைய காலகட்டங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான வளர்ச்சி உலகத்தில் தொழில்நுட்பங்களும் இதனை அடுத்த கட்டத்திற்கு நம்முடைய கலையை கொண்டு செல்லும். தினமும் புகைப்படம் எடுப்பதை விட அதிமுக்கியமான விஷயம், புகைப்படம் எடுப்பதில் புதிய யுத்திகளை முயற்சி செய்வது. அனுதினமும் ஒரே மாதிரியான காட்சிகளை படம் பிடிப்பதில் ஒரு பயனும் இல்லை. நீங்கள் Photo Walk செல்லும் இடங்களை மாற்றி கொண்டே இருங்கள். புதிய இடம், புதிய முகங்கள், புதிய நிறங்கள் என்ற தேடலை வளர்த்துக்கொள்ளுங்கள்.
இதைத் தவிர மாறுபட்ட வெளிச்சங்களில் புகைப்படம் எடுக்க முயலுங்கள். பொதுவாக போட்டோகிராபி துறையில் Magic Hours (Golden times) என்றழைக்கப்படும். அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்கள்தான் Outdoor போட்டோகிராபிக்கு சிறந்த நேரம். ஆனால் இரவு நேரம், மதிய நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களும் தங்களுக்கே உரித்தான பிரத்யேக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அவைகளையும் முயற்சித்து பாருங்கள். இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் புன்னகைத்துக் கொண்டே இருக்க புகைப்படங்களும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுத்துக் கூற இயலாது என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC