சுகாதாரத்துறை செயலாளர் வருகை - நோயாளிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைத்த திருச்சி அரசு மருத்துவமனை!
திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு மருந்து பிரிவில் மருந்து சீட்டுகளை கொண்டு சென்று நோயாளிகள் தங்களுக்கான மருந்தினை வாங்குவர்.
குறிப்பாக இதய நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் முழுவதும் ஒரே நாளில் வழங்கப்படும்.
இன்று சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.அந்த நேரத்தில் மாத்திரை வாங்கும் பிரிவில் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசைகளில் நின்றனர்.
மேலும் சிலர் வெகுநேரம் நிற்க முடியாமல், தாங்கள் கொண்டு வந்த பைகளை வரிசையில் இடம் போட்டுவிட்டு சென்று ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தனர். கொரோனா பரவி வரும் இந்த சூழலில் மக்கள் அதிகம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையிலேயே மருந்து வழங்கும் பிரிவில் மக்கள் அதிக அளவு கூடியதும், அதுவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வந்திருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் மருந்து வழங்கும் பிரிவு அலுவலர்கள் துரிதமாக மருந்துகளை வழங்காமல் வெகு நேரம் காத்திருக்க வைத்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.