இலக்கியத்தில் விருந்தோம்பல் - பகுதி -7

இலக்கியத்தில் விருந்தோம்பல் - பகுதி -7

யாரால் உலகம் வாழ்கிறது எனக்கூறும் இலக்கியப் பாடலின் கருத்தையும் அதிலுள்ள விருந்தோம்பல் கூற்றையும் இக்கட்டுரையில் காண்போம். "உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி; புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே" என்ற புறநானூற்றுப் பாடலின் கருத்தைப் பார்ப்போம்.

இப்பாடலை எழுதியவர் பாண்டியர் குலத்தவராவார். அவரது பெயர் இளம்பெருவழுதி ஆகும். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்றே இவரைக்குறிப்பிடுகிறது புறநானூறு. இவர் திருமாலைப் பற்றியும் ஒரு பாடலும் எழுதியிருக்கிறார். பின்னாளில், கடலில் சென்றபோது மறைந்த துயரச்செய்தியால் இப்பெயரை இவர் பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பாடல் புறநானூற்றில் 182ஆம் பாடல் ஆகும்.

இந்திரர்க்கு உரிய அமுதமே கிடைத்தாலும்; அது எனக்கு இனியது என்று கருதி, தான் மட்டும் தனித்து உண்ணாமல், பிறருக்கு அளித்து பின்னர் உண்பவர், கோபம் இல்லாதவர்,, மற்றவர் அஞ்சுவதற்கு தானும் அஞ்ச வேண்டும் என்று நினைக்காமல் வீரமாகவும் தைரியமாகவும் இருப்பவர், சோம்பல் இல்லாதவர் நல்ல புகழுக்குரிய காரியங்களை செய்வதற்காக உயிரையும் கொடுப்பவர், உலகமே தனக்கு கிடைத்தாலும் பழிச்சொல் தரும் பாவச் செயலை செய்யாதவர் ஆகியன போன்ற நற்குணங்களைக் கொண்ட மக்கள் வாழ்வதால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்ற கருத்தை இப்பாடல் வலியுறுத்துகிறது.

தனக்குக் கிடைத்த அரிய உணவையும், உயிர்காக்கும் அமிழ்தமும் கிடைத்தாலும் அடுத்தவர்க்கு கொடுத்து உண்ணும் பழக்கம் உடையவர்களால் உலகம் உய்த்திருக்கிறது என்கிறது இப்பாடல், உலகம் நன்முறையில் இருக்க இவ்வாறான விருந்தோம்பல் பண்பு அவசியம் என்பதை இப்பாடல் மூலம் நாம் அறிய முடிகிறது. பொது இடங்களிலும் இல்லத்திலும், நமக்கு கிடைக்கும் உணவை மற்றவர்க்கு அளித்து பின்னர் உண்ணும்போது கிடைக்கும் மனநிறைவைப் பெற்று நம் விருந்தோம்பல் பண்பைப் போற்றுவோம்.

தொகுப்பாளர் தமிழூர், கபிலன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision