குழந்தைகளின் கோடை காலவிடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளின் கோடை காலவிடுமுறையை  பயனுள்ளதாக மாற்றுவது எப்படி?

குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதும் குறைந்துள்ளது. தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது.இந்த கோடை கால விடுமுறையை மாணவர்கள் எவ்வாறு கழிக்கின்றனர்? எவ்வாறு பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என காண்போம்

இந்த கோடை விடுமுறையில் உடலும் மனமும் உறுதி பெற நீச்சல் பழகலாம். கேரம், செஸ், போன்ற சிந்தனையை தூண்டும் விளையாட்டுகளிலும், கபடி, கிரிக்கெட் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் போட்டிகளில் பங்கெடுத்து கொள்ளலாம்.

 ஓவியத்தில் ஆர்வம் இருப்பவர்கள் ஓவியப் பயிற்சியை கற்று கொள்ளலாம். யோகாவில் விருப்பம் உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதுதவிர படங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண்ணால் ஆன பொருட்கள் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம். முக்கியமாக பெற்றோர் குழந்தைகளை அருகில் உள்ள நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு கதை புத்தகங்களையும் சிறு, சிறு கட்டுரைகளையும் படித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். 

கைவினை பொருட்கள் செய்வதற்கான வகுப்புகளில் சேர்ந்து கைவினைப் பொருட்களை செய்யவும் வடிவமைக்கவும் கற்றுக் கொள்ளலாம்.வாசிப்பு என்பது குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். எனவே, கோடைகாலத்தில் தினசரி நாளிதழ்கள், சிறிய சிறிய கதை புத்தகங்களை படிக்க சொல்லலாம். இதனால் வாசிப்பு திறன் மேம்படும். மேலும், பொது அறிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது மறந்து வரும் விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், ஸ்கிப்பிங், உள்ளே வெளியே போன்ற விளையாட்டுகள் விளையாடுவதால் உடல், மன ஆரோக்கியம் பெறமுடியும், பெற்றோர்களும், குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது விட்டு கொடுக்கும் மனப்பான்மையை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற பழமையான நம் கலாசார தொடர்புடைய விளையாட்டுகளும் மறந்து போகாமல் இருக்கும். தோட்டக் கலையைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.

பல்வேறு அமைப்புகள் சார்பில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடத்துகின்றனர். அங்கு கைப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் குறித்து இலவசமாக பயிற்சி வழங்குகின்றனர். பங்கு பெறும் குழந்தைகளை ஊக்குவிக்க சான்றிதழ்கள், உணவுகள், சீருடைகள் வழங்கப்படுகிறது. அங்கு அனுப்பி பயிற்சி பெற வைக்கலாம். செல்போனிலேயே மூழ்கிகிடக்கும் குழந்தைகளுக்குள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். 

அந்த விளையாட்டினை பெற்றோர் கண்டுபிடித்து அதில் பயிற்சி வழங்கலாம். ஆறு, குளங்களில் பல குழந்தைகள் மூழ்கி உயிரிழக்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி வழங்க வேண்டும். 

குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் செல்போன் பயன்பாட்டை குறைத்து அவர்கள் உடல் ஆரோக்கியத்தையும் கோடைக்காலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடவும் இது போன்ற பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம் .