திருச்சியில் 15 வயது சிறுமியின் வயிற்றுக்குள் கட்டியாக மாறிய தலைமுடி -அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது
திருச்சி மாவட்டம், லால்குடியில் வசிக்கும் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு(வயது 15) சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. திடீரென வயிற்று வலி அதிகமாகி வாந்தி எடுத்ததால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 12.2.22 அன்று அனுமதிக்கப்பட்டார்.
அவரை முழுமையாக பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவருக்கு நீண்ட நாட்களாக தலைமுடி மற்றும் நூல் ஆகியவற்றை சாப்பிடும் வினோதமான மனநோய் இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு சி.டி. ஸ்கேன், என்டோஸ்கோபி போன்ற உயர் பரிசோதனைகள் மேற்கொண்டபோது வயிற்றில் தலைமுடி திரண்டு மிகப்பெரிய முடி கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதற்கு "ராப்புன்சல் சிண்ட்ரோம்" (RAPUNZEL SYNDROME) என்று பெயர். உலக அளவில் இதுவரை 68 நபர்களுக்கு மட்டுமே இந்த வினோத நோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை முதல்வர் மருத்துவர் K.வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி முடிகட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
கடினமான இந்த அறுவை சிகிச்சையை,அறுவை சிகிச்சை மருத்துவர் பேராசிரியர். மகாலஷ்மி அசோக்குமார், உதவி பேராசிரியர் மருத்துவர் D. உமா ,மயக்கவியல் மருத்துவர்கள் K.சந்திரன், V.பாலசுப்பிரமணிய குகன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் .R. ஏகநாதன் மற்றும் மயக்கவியல் துறை தலைவர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 18.2.22 அன்று தொடர்ந்து 4 மணி நேரம் மேற்கொண்டு வெற்றிகரமாக செய்து முடித்தனர். பொதுவாக வயிற்றுப் பகுதியில் மட்டுமே இருக்கும் இந்த முடிகட்டி, சுமார் 25 சென்டி மீட்டர் நீளத்திற்கு மாணவியின் சிறுகுடல் வரை பரவி இருந்ததாலும் அந்த முடிகட்டி சிறுகுடலை அழுத்தி ஓட்டை விழும் அளவிற்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததாலும் இந்த அறுவை சிகிச்சை மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.மேலும் மாணவிக்கு மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு அண்மையில் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 3 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த உயர் அறுவை சிகிச்சை கட்டணம் இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...