ராமஜெயம் கொலை தொடர்பாக துப்புக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் - SIT - SP பேட்டி

ராமஜெயம் கொலை தொடர்பாக துப்புக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் - SIT - SP பேட்டி

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையிலுள்ள திருவளரச்சோலை பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார். சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவத் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழகக் காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி பாரதிதாசன், கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ, காவல்துறை ஆகியவை விசாரணை நடத்தியும், கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை என்பதால், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும்; அடுத்தகட்ட விசாரணையைச் சிறப்புக் குழு புலனாய்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டார்.

சிபிசிஐடி உயர் அதிகாரி சகீல் அக்தர் இந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், அதை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டதுடன், 15 நாள்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்... குற்றவாளிகளை பிடிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன், புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 45 பேர் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்துள்ளோம். இதில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். தேவைக்கு ஏற்ப இதில் காவல் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள சத்தேகத்திற்கு இடமான கைதிகளிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.

இந்த கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால்,  பொதுமக்கள் கீழ்கண்ட ஈ.மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்தவும். rmathan1970@gmail.com காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் - 9080616241. DSP மதன் - 9498120467, 7094012599 தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களைப் பற்றிய விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO