திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று இரண்டாவது அலையால் விமான பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பல நாடுகள் தங்களுடைய விமான சேவைகளை சில நிபந்தனைகளோடு தொடங்கியுள்ளன. திருச்சியில் இருந்து தற்போது துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட் மற்றும் கொழும்பு விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மத்திய அரசின் மீட்பு விமான சேவையான வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் இந்தியாவிலேயே அதிகமாக 320 விமான சேவைகள் திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த சூழலில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
அதேசமயம் சரக்கு ஏற்றுமதி ஆனது எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருத்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களுடைய சேவையை நிறுத்தி இருந்த நிலையில் தற்போது திருச்சி - கொழும்பு இடையே தங்களுடைய சேவையை தொடங்கியுள்ளது. மே, ஜூன் மாதங்களில் 15,000 - 17,000 பயணிகள் என்ற எண்ணிக்கை தற்போது ஆகஸ்ட் மாத இறுதியில் 33,000 என்றளவில் அதிகரித்துள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி நகரைச்சேர்ந்த பயண முகவர் ரமேஷ் குறிப்பிடுகையில், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதே சமயம் அரசு தடுப்பூசி செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டு விரைந்து செயல்பட வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அபுதாபியில் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதே போன்ற பல நாடுகளும் பின்பற்றினால் அனைவரும் விரைவில் தடுப்புச் எடுத்துக் கொள்வார்கள் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn