ஆயிரம் கதைகள் சொன்ன கதை சொல்லி கார்த்திகா கவின் குமார்!
“குழந்தைகள் மத்தியிலும், பெரியவர்களின் மத்தியிலும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க, அவர்களுக்குச் சிறந்த புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யவே இந்தக் கதை சொல்லலை ஆரம்பித்தேன்” என்று கூறும் கார்த்திகா கவின் குமார் கவிஞர் எழுத்தாளர் கதை சொல்லி என்று பன்முக திறமையாளராக வலம் வருகிறார் கவிஞர் கார்த்திகா கவின் குமார். பேராசிரியையாகப் பணியாற்றி, இணைய வழியில் உலகளாவிய வெளிநாட்டுவாழ் மாணவர்கள், அயல்நாடு மற்றும் அயல் மாநில பரத நாட்டியக் கலைஞர்களுக்கு தமிழிலக்கிய, இலக்கணங்களை கற்பித்து வருகிறார்.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், தமிழிலக்கணங்கள் ஆகியவற்றில் தேர்ந்தவர். தொல்லியலில் அதிக ஈடுபாடு உடையவர். இவள் தாரகை, குருகுலத் தென்றல், மக்கள் மனம் போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளது. அசோக மித்ரா, காவியக் கல்கி, கவித்தென்றல், இலக்கியத் தேனீ, சிறந்த சமூக சேவகர் விருதினைப் பெற்றவர். திருச்சி மாநகர தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், ஏமம் இளம் பெற்றோர் ஆலோசனை அமைப்பின் தலைவராகவும் இயங்கி வருகிறார். இயற்கை வாழ்வியல் முறைகளை மேற்கொண்டு வருபவர்.
இவருடைய இணையர் கவின் குமார் அவர்களும் இவருடன் இணைந்து சிறார் சார்ந்த கள செயல்பாடுகளில் இயங்கிவருகிறார். அகப்பை முகங்கள், கேக்கின் பிறந்தநாள், சிறார் பாடல்கள், புறநானூறு உரை, தொல்காப்பிய உரை குப்பை மேனிகள் நாவல் (துப்புரவாளர்களைப் பற்றியது) போன்றவை இவரின் படைப்புகள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்,கதை சொல்லியாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கதை மற்றும் கவிதை எழுதும் பயிற்சியை பள்ளிகள்தோறும் செய்துவருகிறார். பள்ளிச் சிறார்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த நடமாடும் நூலகம் தொடங்கி, பள்ளி மாணவர்களிடைய வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தி மாதந்தோறும் பரிசு வழங்கி வருகிறார். கதை கதையாம் என்ற பெயரில் புலனக் குழுவில் சாகித்திய அகடமியின் பால புரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் உள்ளிட்ட ஆறு பேர் இணைந்து சிறார் கதைகளை கூறி வருகிறார்.
திருச்சி மாவட்ட குழந்தைகளை, மாவட்ட மைய நூலகத்தில் ஒருங்கிணைத்து மாதந்தோறும் கதைப் பயிற்சி, நாடகப் பயிற்சி, கதை சொல்லல் நிகழ்ச்சி, மொழிப்பயிற்சி ஆகியவற்றைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையத்தில் இவருடைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
இவருடைய மூத்த மகள் இளம் எழுத்தாளர் சாய் மகஸ்ரீ "தங்கப்பெண் சொன்ன கதை" எனும் சிறார் சிறுகதை நூலின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு நடத்திய புத்தகத் திருவிழா (2023)காவிரி கலை இலக்கியத் திருவிழா(2024) ஆகிய அரசு சார் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியவர்.
கவிஞர் கார்த்திகா கவின் குமார்கதை சொல்லலின் அவசியம் குறித்து பகிர்ந்து கொள்கையில்,
கதைகேட்பது என்பது அனைவருக்கும் அலாதியானதுதான். அதுவும் கார்த்திகா போன்ற அனுபவமுள்ள மனிதர்கள் கதை சொல்லும் போது நம்மையும் மறந்துவிடுவோம்.
இன்றைய தலைமுறையினருக்கு கதை கேட்டு வளரும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.காரணம் இன்றைய அவசர உலகத்தில் பொருள் தேடி அலைந்து தன் குழந்தைகளைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளும் சுட்டி டிவி போன்ற இருபத்தி நான்கு மணிநேர கார்டூன் சேனல்களிடம் தன்னை புதைத்துக் கொண்டுவிட்டனர்.
இப்படியான ஒருகாலக்கட்டத்தில் கதைசொல்லும் தாத்தா,பாட்டிகளும் குறைவு. சிறுவயதில் என் அம்மாவிடம் கதை சொல்ல சொல்லி நச்சரித்ததுண்டு.என் அம்மாவுக்கும் இரண்டு கதைகளுக்கு மேல் தெரியாது.இருந்தாலும் இரண்டு கதையையே மீண்டும் மீண்டும் சொல்லச்சொல்லி கேட்டதுண்டு.கதை கேட்டு வளராத இன்றைய குழந்தைகளையும்,கதை சொல்லாத இன்றைய பெற்றோர்களையும் நினைக்கும் பொழுது வருத்தம் தான்...
வளரும் தலைமுறைக்கு கதை சொல்லி வளர்ப்போம்..
ஏனெனில் இந்த உலகம் கதைகளால் நிறைந்தது
நம்முடைய வரலாறுகளை கதைகளாக கூறும்பொழுது தான் தெரியும் அப்படியான கதைகள் நம் வாழ்வியலோடு தொடர்புடையது என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision