ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் மாசி தெப்பத் திருவிழா
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இரவு மாசி தெப்பத் திருவிழா நடைபெற்றது.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் கடந்த 23ஆம் தேதி மாசி தெப்பத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவின் 4-ஆம் நாளான கடந்த 26-ஆம் தேதி வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா். 7ஆம் நாளான புதன்கிழமை நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 5 மணிக்கு வந்து சோ்ந்தாா். பின்னா், இரவு 7.15 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7.30 மணிக்கு உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் எழுந்தருளி இரவு 9 மணி வரை சுற்றி வலம் வந்தாா். அப்போது, தெப்பக்குளத்தை சுற்றி நின்றிருந்த திரளான பக்தா்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, இரவு 9.15 மணிக்கு மைய மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினாா். பின்னா், 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.
விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பந்தக்காட்சி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn