400 ரூபாயில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த விவசாயி

400 ரூபாயில் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த விவசாயி

டெல்டா அல்லாத பகுதிகளில் தற்போது கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் நவரை சாகுபடி 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது பயிர்கள் நன்றாக விளைந்துள்ள நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணியை வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்று ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்துள்ளார் உப்பிலியபுரம் விவசாயி ராமதாஸ். 

இது குறித்து அவர் கூறுகையில்... இன்றைக்கு விவசாயம் செய்வதே மிகவும் சவாலான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு பணிக்கும் வேலையாட்களை தேடுவது அதை விட இன்னும் சவாலாகி கொண்டிருக்கிறது. விவசாயத்திற்காக கூலி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. பிற ஊர்களுக்கு சென்று  வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் நிலை தான் இப்போது உள்ளது. 100 நாள் வேலை திட்டம் என்று தொடர்ந்து வேலை கிடைப்பதாலும் வேறு பணிக்கு செல்வதால் எப்போதாவது கிடைக்கும் இந்த வேலைகளுக்கு அவர்கள் வருவதற்கு தயங்குகின்றனர். அப்படியே வேலைக்கு வருபவர்களும் தங்களுடைய கூலி அதிகமாக கேட்கின்றனர்.

கிட்டத்தட்ட பணியாட்களை வைத்து செய்யும் பொழுது 6 முதல் 7 மணி நேரம் ஆகும் வேலையை 45 நிமிடங்களில் முடித்துக் கொடுத்து விட்டார்கள். ட்ரோன் வாடகை மற்றும் ட்ரோன் இயக்கும் ஆபரேட்டர் என இரண்டு நபர்கள் மட்டுமே இதில் பயன்படுத்தப்படுகிறார்கள். ட்ரோனில்  பயன்படுத்தப்படும் கேன்கள் கிட்டத்தட்ட 15 லிட்டர் கொள்ளளவு உடையது. நாம் பூச்சிக்கொல்லி மருந்தை சரியான முறையில் தேவையானவற்றை கலந்து கொடுத்த பின்பு அவர்கள் அதனை தெளிக்கும்  பணியை மட்டும் செய்கின்றனர். 

ஒரு ஏக்கருக்கு 400 ரூபாய் என்ற வீதத்தில் அவர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். என்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் தற்போது ட்ரோன்  பயன்படுத்தியே பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்துள்ளேன். நாங்கள் செய்யும் பொழுது கூட ஆங்காங்கே பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியாக எல்லா இடங்களிலும் சேர்க்க இயலவில்லை. ஆனால் ட்ரோன் மூலம் செய்யும் பொழுது அது எல்லா இடங்களையும் சரியான முறையில் பூச்சி கொல்லி மருந்து தெளித்து வருகிறது.

அப்படியே ஒரே இடத்தில் நின்றால் சென்சார் மூலம் அறிவிக்கப்பட்டு எல்லா இடங்களிலும் தெளிக்கப்படும் ஒரு தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. சம்பா குறுவை தாளடி சாகுபடி பிறகு தற்போது தான் அத்தி பூத்தாற்போல் நவரை சாகுபடி செய்கின்றோம் அதனை சரியான முறையில் செய்ய இது போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf