ஜி கார்னருக்கு செல்ல மாட்டோம். காந்தி சந்தை வியாபாரிகள் உறுதி.

ஜி கார்னருக்கு செல்ல மாட்டோம். காந்தி சந்தை வியாபாரிகள் உறுதி.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம், மளிகை,  இறைச்சி என 1500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லரை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு மொத்த வியாபாரம் ஜி கார்னர் மைதானத்தில் செயல்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின் மீண்டும் காந்தி மார்க்கெட் செயல்பட தொடங்கியது. இதனையடுத்து கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் முறையாக முகக் கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை என கண்டறிந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க காந்தி மார்க்கெட் நாளை மதியம் முதல் மூடப்பட்டு தற்காலிக மொத்த சில்லரை விற்பனை பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என மாநகரட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்த முடிவிற்கு காந்தி சந்தை வியாபாரிகள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் காந்தி மார்க்கெட்டை முழுமையாக அடைத்து பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்ய உத்தரவிட்டனர். இதனால் வியாபாரிகள் மனதளவிலும், உடல் நலத்திலும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இல்லாததால் வியாபாரிகள் 8 மாதம் பெரிதும் கஷ்டப்பட்டனர். இதுமட்டுமின்றி இந்த இடம் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இங்கு வெயில் காலத்தில் மேற்கூரை அமைக்க அனுமதி இல்லை, இரவில் விஷ பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. மழை பெய்ததால் இந்த மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இது போன்ற ஏராளமான இன்னல்கள் உள்ள பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை ரத்து செய்து அரசின் புதிய உத்தரவில் குறிப்பிட்டுள்ள நேர கட்டுபாட்டுடன் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய நாளை பதவியேற்கயுள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாளை முதல் வியாபாரம் செய்வதை நிறுத்தி தொடர்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf