இணையவழியில் JEE தேர்வுக்கு   பயிற்சி அளிக்கும் தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள்

இணையவழியில் JEE தேர்வுக்கு   பயிற்சி அளிக்கும் தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள்

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் பொறியியல் துறையில் சேர்வதற்கான  நுழைவுத் தேர்வான JEE தேர்வில் ஏழை எளிய மாணவர்களும் வெற்றி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது வழக்கம். ஆனால்,  கொரோனா தொற்று காரணமாக  கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால்  மாணவர்கள் அனைவருமே தங்களுடைய கல்வி படிப்பினை  இணைய வழியாக கற்று வருகின்றனர். எனினும்  ஏழை எளிய மாணவர்களுடைய பொறியியல்படிப்பு கனவை நினைவாக்குவதற்காக  தொடங்கப்பட்ட இந்த  திட்டத்தை பாதியில் கைவிடுவதை விரும்பாத மாணவர்கள் பொறியியல் கற்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இணையவழியில்  தொடர்ந்து  பயிற்சி அளித்து வருவதாக கூறுகிறார் தேசிய தொழில்நுட்ப  கழக மாணவி சுருதி. 

மேலும் அவர்   கூறுகையில்,

"பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல இயலாத மாணவர்களுக்கு அவர்களுடைய பொறியியல் படிப்பு கனவு கனவாகவே போய் விடக்கூடாது என்பதற்காக எங்கள் கல்லூரி மாணவர்களால் தொடங்கப்பட்டது இந்த இலவச பயிற்சி வகுப்பு.

ஏற்கனவே நேரடியாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது இணைய வழியில் தொடர்ந்து நடத்தி வருகிறோம். லால்குடி, மணப்பாறை  ஆகிய பகுதிகளிலும் திருச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். 

12 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கிறோம். இதில் இந்த ஆண்டு  12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே   தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடித்தப்படியால் அவர்களுக்கு தற்போது வாரத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தி  அவர்களை நுழைவுத்தேர்வுக்கு   தயார்படுத்தி வருகின்றோம்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பாடத்திட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் பொழுது அவர்கள் எந்த பாடங்கள் தங்களுக்கு  கடினமாக கருதுகிறார்கள் என்று   மாணவர்களிடம் கேட்டறிந்து அவர்களுக்கு அந்த பகுதி பாடங்களில்  அதிக அளவில்  கவனம் செலுத்தி கற்றுக் கொடுக்கிறோம் .

ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு வழியில் JEE தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்வழி மாணவர்களையும் அதிகளவு ஊக்கப்படுத்தி இதில் பயிற்சி அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மாணவர்களின் ஆர்வம் இன்றி  எங்களால் எதுவும் செய்திட இயலாது அவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதால் நாங்களும் எங்களால் முடிந்த அளவிற்கு எங்களை ஊக்கப்படுத்திக்கொண்டு  அவர்களுக்கு உதவிட  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இணைய வழியில் கல்வி கற்றுக் கொடுப்பதால் டிஜிட்டல் பேடுகள் பயன்படுத்துகின்றோம் இதனால்  நேரடியாக வகுப்பறையிலேயே அவர்கள் கவனிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இந்த கொரானா  காலத்தில் அவர்களுடைய கல்வி திறன்  எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே இதனை தொடர்ந்து செய்து வருகின்றோம். இந்த ஆண்டிற்கான பொறியியல்  துறைக்கான நுழைவுத் தேர்வுக்கான தேதி தள்ளிவைக்கப்பட்டது அடுத்து மாணவர்கள் உளவியல் ரீதியாகவும்  எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அவர்களை ஊக்கப்படுத்தும்  வகையில் அவர்களுக்கான ஆலோசனைகளையும் அளித்து வருகின்றோம்" என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd