தேசிய பத்திரிக்கையாளர் தினம்: இது திருச்சி பெண் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு அனுபவங்கள்

தேசிய பத்திரிக்கையாளர் தினம்: இது திருச்சி பெண் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு அனுபவங்கள்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்”
என்ற பாரதியின் இந்த எழுச்சி வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்டு அதை ஊருக்கு வெளிப்படுத்தும் தைரியமிக்க அனைவருமே சுதந்திர உணர்வுமிக்க பத்திரிக்கையாளர்களே!

Advertisement

இன்று தேசிய பத்திரிக்கையாளர் தினம்:
தேசிய பத்திரிகையாளர் தினம் என்பது ஊடக சுதந்திரம் மற்றும் தன்னிச்சையான தைரியத்துடன் இயங்கும் இதழியல் துறையின் செயல்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 ஆம் நாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஊடகத் துறையை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள் இதில் பத்திரிக்கையாளர்கள் சமூகத்தின் கண்ணாடி போன்றவர்கள். இந்த சமூகம் என்ன நினைக்கிறது என்பதை எதிர்ப்புகளை, எதிர்பார்ப்புகளை, ஆதங்கங்களை,ஏமாற்றங்களை, வலிகளை, துயரங்களை ,துன்பங்களை ,இன்பங்களை அறச்சீற்றங்ளை என அனைத்தையும் பதிவு செய்ய இன்றளவும் ஊடகங்கள் பயன்படுகின்றன.
இது ஒருபுறமிருக்க பெண் பெண் பத்திரிகையாளர்களின் பத்திரிகை உணர்வுகளை எடுத்துரைக்கிறது இந்த பதிவு. திருச்சியில் உள்ள பெண் பத்திரிக்கையாளர்களின் சிறப்பு கலந்துரையாடலையும்  அவர்களின் அனுபவங்களையும் பத்திரிக்கை தினமான இன்று பாராட்டி வெளியிடுகிறோம்.

திருச்சி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிகையாளர் சுவாதி பாலசுப்பிரமணியன்
கூறியதாவது”  நான் பத்திரிகையாளராக ஆனாது ஒரு மகிழ்ச்சியான விபத்து. ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். மற்ற எந்த வேலைகளிலும் இல்லாத திருப்தியை பத்திரிகையாளராக இருந்து முழுமையாக அதை உணர்கிறேன். மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன். நான் ஒரு விஷயத்தை அறியும்போதும் அதைப்பற்றிய முழுமையாக விவரித்து எழுதும்போதும் அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் போதும் இந்த விஷயத்தின் மூலம் ஏதாவது ஒரு மாற்றம் நிகழுமா? என இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதை எப்படி பார்ப்பார்கள்? என்பதை ஒரு பத்திரிகையாளராக இருந்து பயணிப்பதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். என்னுடைய இந்த பயணத்தில் வேல்பாரி நூல் வெளியீட்டு விழா மற்றும் கீழடி பற்றிய செய்திகளை  எழுதிய   தருணம் என்னால் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. பெண் பத்திரிகையாளராக இருந்து பார்க்கும் போது ஒவ்வொரு பெண்ணும் தன்னை பலவீனமானவராக நினைக்கிறார்கள்.ஆனால் இது ஒரு பத்திரிகையாளர்களுக்கு இருந்தால் அது முக்கியமாக தோல்வியில்தான் முடியும். எனவே எப்போதும் தைரியமாகவும் வலுவான மன தைரியம் வேண்டும். நிறைய பெண்கள் பத்திரிக்கை துறையில் தங்களுடைய தடங்களை பதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்”. என்றார்

டைம்ஸ் ஆஃப் இந்தியா
சுவாதி பாலசுப்பிரமணியன்

திருச்சி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் சௌமியா மணி கூறியதாவது… “பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு. பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சி.ஏ. படித்தேன்.பின்பு முதுநிலை பத்திரிககையாளர் படிப்பை மேற்கொண்டேன். என்னுடைய கனவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன். திருச்சிக்கு வருவதற்கு முன்பாக மூன்று வருடம் மும்பையில் தொலைக்காட்சியில் வேலை செய்தேன். இப்போது திருச்சியில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளராக வேலை செய்து வருகிறேன். பத்திரிகையாளராக வேலை செய்வது என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்று. அதுவும் திருச்சி போன்ற ஊர்களில் மிகுந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. நிறைய செய்திகளை எழுதிக்கொண்டிருக்கிறேன் மும்பைக்கு அடுத்து திருச்சி போன்ற நகரங்களில் வேலை செய்வதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்.சிறிது வியப்பாகத்தான் இருக்கிறது திருச்சியில் மிக குறைந்த அளவுதான் பத்திரிக்கையாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.அதுவும் குறைந்த சம்பளத்திற்கு தான் வேலை செய்து வருகின்றனர்.குறைந்த சம்பளமாக இருந்தாலும் சரி முழு மகிழ்ச்சி அடைகிறோம்.
என்னுடைய கல்யாணத்திற்கு பிறகுதான் இந்த பத்திரிக்கையாளர் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தேன். என்னுடைய கணவர் தான் என்னுடைய கனவுகளை நிகழ்வாக ஆக்கிக் கொடுத்தவர். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு  பின்னாடியும் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பார் எனக்கு என்னுடைய கணவர் இருந்தார். என்னுடைய வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு என்னவென்றால் திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சானிட்டரி நாப்கின் பற்றி ஒரு செய்தி வெளியிட்டு அது மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது. அது மிகுந்த வாழ்வில் மறக்க முடியாத செய்தியாக அமைந்தது. ஒவ்வொரு பெண்களாலும்  முடியும் பத்திரிக்கையாளராக  உருவாவதற்கு” என்றார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
சௌமியா மணி

திருச்சி புதிய தலைமுறை பத்திரிகையாளர் பிருந்தா கூறியதாவது….”என்னுடைய பார்வையில் பத்திரிக்கை துறை என்பது சமூகத்தினுடைய முதல் குரல் என்றுதான் சொல்வேன்.
நான் படித்த துறைக்கும் நான் வேலை செய்யும் துறைக்கும் சம்பந்தமே இல்லை.
தமிழ் மீது கொண்ட ஆர்வம் பேச்சு துறையில் என்னை வளர்த்தது நான் பேசுகின்றது மட்டும் வெறும் பேச்சாக போய்விடக்கூடாது, சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், சமூகத்தின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான்  பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்தேன்.
ஒரு அரசியல்வாதியால், ஒரு அதிகாரியால், ஒரு காவல்துறையினரால் கூட சில சமயங்களில் சொல்ல முடியாத உண்மைகளை ஒரு பத்திரிகையாளரின் பேனாவின் முனை சொல்லிவிடும் என்று சொன்னால் அந்தப் பேனா முனைக்கு மிகுந்த பலம் உள்ளது என்பதுதான் என்னுடைய பார்வை. இத்துறையை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சமூகப் பணியோடு சேர்ந்து நம்முடைய பணி இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம்தான்… இந்த பயணத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.

இத்துறையில் என்னுடைய பணி என்று பார்க்கும் பொழுது நான் பெருமளவு சமூக ரீதியான, சமூக அக்கறை கொண்ட, சமூகத்தின் தேவைகளை செய்தியாக எடுத்து வெளியிட வேண்டும் என்று அதிகம் எண்ணுவேன்.
சில தலைவர்கள் பின்னால் சென்று அவர்களுடைய கருத்து என்ன என்று கேட்பதைவிட, மக்களுடைய குறைகள் என்ன? மக்களுடைய தேவை என்ன? என்று கேட்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு நிறைவு பெறுகிறது. ஓராண்டு சென்றதே தெரியவில்லை.
தினமும் வேலைக்கு வருவதாக எண்ணி நான் வருவதே கிடையாது. இன்று நம் சமூகம் எப்படி இருக்கப் போகிறது? நம் சமூகத்தில் என்னவெல்லாம் மாற்றம் நிகழப் போகிறது? என்ற தேடலுடனே வருவேன். அந்த தேடல் இந்த ஓர் ஆண்டினை வெகு சீக்கிரமாக கடத்திவிட்டது என்றே சொல்லலாம்.

செய்தி தொகுப்பு எடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் செல்லும் செய்திகளில் உள்ள செய்தித் தொகுப்பினை உற்று கவனிக்கும் பழக்கம் கொண்டிருப்பேன். திருச்சிக்கு வந்ததிலிருந்து நான் எடுத்த செய்தி தொகுப்புகள் அனைத்துமே எனக்கு நல்ல பெயரையும், வெற்றியையும் அதற்கான அதிக பலன்களையும் கொடுத்துள்ளது. அப்படி என் வாழ்வில் நான் மறக்க முடியாத ஒரு செய்தி தொகுப்பு எதுவென்றால் மாத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு தண்ணீர் வசதி இல்லை என்று செய்தி தொகுப்பு எடுத்து வெளியிட்டு, அதன் விளைவாக அப்பள்ளிக்கு  தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மிகுந்த சந்தோஷம். அதுமட்டுமல்லாமல் ஏழைக்குழந்தைகள் படிக்க கூடிய ஒரு ரூபாய் டீச்சர் கோமதி என்ற செய்தி தொகுப்பு எடுத்துக் கொடுத்து, அதன் விளைவாக அந்த குழந்தைகள் படிப்பதற்கான இடமும், அந்த குழந்தைகளின் கல்வி வசதியையும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஏற்று உதவி வருகிறார்கள் என்று அந்த ஆசிரியை என்னிடம் தெரிவிக்கும்போது உள்ளபடியே மகிழ்ச்சி அடைகின்றேன்.பெண் பத்திரிக்கையாளர்  என்று பத்திரிகை துறையில்  ஒதுங்கி நிற்க விரும்பவில்லை.
நான் என்னை ஒரு பத்திரிகையாளராக மட்டும்தான் பார்க்கிறேன். ஒரு செய்தியாளராக எல்லா செய்தி களத்திலும் நின்று என்னால் பணி செய்ய முடியும் என்கின்ற உறுதியை என் மனதில் நான் வைத்துள்ளேன்.  இந்த வெற்றிப் பாதைக்கு எனக்கு மேலும் ஒரு பலம்  என்றால் என்னுடைய பேச்சுத்திறமை. நமக்கான ஆயுதம் எதுவோ அதை நாம் கையில் ஏந்தும் பொழுது நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போன்று  பேச்சு திறமையை கையில் வைத்து, செய்தி துறையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன்.தேசிய பத்திரிகையாளர் தினத்தன்று நான் சொல்ல நினைக்கின்ற தகவல் என்னவென்றால் பத்திரிக்கை துறையில் ஒரு செய்தியை செய்தியாக வெளியிடுவதை காட்டிலும், அந்த செய்தியினுடைய பலன் அந்த செய்தி தாரர்களுக்கு சென்று சேரும் பொழுது, அது பத்திரிக்கை துறையின் வெற்றியாக இருக்கும். அடித்தட்டு மக்களுடைய குறைகளும் தீரும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடு இன்னும் பயணம் செய்ய விரும்புகிறேன்.” என்றார்.

புதிய தலைமுறை
பிருந்தா

திருச்சி தி இந்து பத்திரிகையாளர் கேத்லின் ரீனா ஆண்டனி கூறியதாவது…
என்னுடைய பெயர் கேத்தரின் ரீனா ஆண்டனி. பெங்களூரில் இருந்து வருகிறேன். கடந்த 7 மாதங்களாக தி இந்துவில் பத்திரிகையாளராக வேலை செய்து வருகிறேன். திருச்சியில் பெண் பத்திரிகையாளர்கள் என்று பார்த்தால் நான்கு பெண்கள் மட்டுமே உள்ளன. வெவ்வேறு விதமான செய்திகளையும் வெவ்வேறு விதமான வேலை நேரங்களையும் அணுகுகிறோம். செய்தி சேகரிக்கும் இடங்களில் ஒளிப்பதிவாளர்கள் பத்திரிகையாளர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாக பழகுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நடந்த திருச்சியில் போர்வெலில்  குழந்தை மாட்டிய சம்பவம் உண்மையாகவே கண்ணீர் வரவைத்த பதிவாக எனக்கு இருந்தது. ஒரு பத்திரிக்கையாளராக இருப்பதை நினைத்து முழு மகிழ்ச்சி அடைகிறேன். அலுவலகத்தில் அனைவரும் நண்பராகவும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான் எழுதிய நிறைய கதைகள், குறிப்பாக மாவட்டத்தின் கிராமப்புறங்களில் சில மாற்றங்களை நிகழ்ந்துள்ளது என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்” என்றார்.

தி இந்து
கேத்லின் ரீனா ஆண்டனி

இவ்வாறாக திருச்சியின் திருப்புமுனையாக இருக்கும் நான்கு பெண் பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களோடு வாழ்த்துகிறது திருச்சி விஷன்.