கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி நீர் - வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடத்தில் ஒரு லட்சம் கன அடி நீர் - வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 

இதனால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட தண்ணீர் திருச்சி முக்கொம்பு தடுபப்ணைக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 32 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 97 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்துவிடப்பட உள்ளது. எனவே காவிரி, கொள்ளிட கரையோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேட்டுப்பாங்கான, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற முறையில் கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ "செல்பி" (Selfie) எடுக்க கூடாது.

குழந்தைகள் நீர்நிலைகளில் இறங்கா வண்ணம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு நீர்நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டாம் எனவும், பாலங்கள் தவிர, பாதுகாப்பற்ற இடங்களில் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனையின் 200 மீட்டர் உடைந்துள்ளது. அதன் அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரம் சாயும் நிலையில் உள்ளதால் கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தயார் நிலையில் தீயணைப்புத் துறையினர், மின்சாரத் துறையினர், காவல் துறையினர் உள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision