காவிரி ஆற்றில் குளித்த வங்கி அதிகாரிகளில் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலா மையத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய இரண்டு பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாளர்கள் இருவரில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரை சடலமாக மீட்டனர்.

   தருமபுரி மாவட்டம், நெல்லை நகரை சேர்ந்தவர் 31 வயதுடைய ராஜசேகர். இவர் திருச்சி மாவட்ட எஸ்.பி.ஐ தலைமை வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த கீர்த்தி சீனிவாசன். இவர்  திண்டுக்கல் நேருஜி நகர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இன்று வங்கி விடுமுறை தினம் என்பதால் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு காரில் வந்த இருவரும் கடுமையான வெயில் காரணமாக காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் தண்ணீர் தத்தளித்தபடி சத்தம்போட்டுள்ளனர். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தண்ணீரில் குதித்து கீர்த்தி சீனிவாசனை உயிருடன் மீட்டனர்.

பின்னர் ராஜசேகரை மீட்க முயன்றபோது அவர் தண்ணீரில் முழுமையாக மூழ்கினார். சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர தேடுதல் போராட்டத்திற்கு பின்பு ராஜசேகரை சடலமாக போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn