"ஆப்ரேசன் அகழி" - 14 பேர் வீட்டில் சோதனை - 258 சொத்து ஆவணங்கள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 செல்போன்கள், 84 சிம்கார்டுகள் பறிமுதல்.

"ஆப்ரேசன் அகழி" - 14 பேர் வீட்டில் சோதனை - 258 சொத்து ஆவணங்கள், 82 நிரப்பப்படாத காசோலைகள், 18 செல்போன்கள், 84 சிம்கார்டுகள்  பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர். திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் "ஆப்ரேசன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

மேற்படி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களான 1. பிரபு என்ற பப்லு, 2) ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், 3) மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ், 4) டேவிட் சகாயராஜ், 5) பாலு என்ற பாலமுத்து, 6) பிரதாப் என்ற சிங்கம் பிரதாப், 7) ராஜகுமார், 8) கருப்பையா, 9) பாதுஷா என்ற பல்பு பாட்ஷா, 10) கரிகாலன், 11) கோபாலகிருஷ்ணன் என்ற தாடி கோபால், 12) சந்திரமௌலி, 13) குருமூர்த்தி மற்றும் 14) டி.டி.கிருஷ்ணன் ஆகியோர்களின் விபரங்களை சேகரித்து அதிரடியாக நேற்று மாலை அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 14 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 42 காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

நேற்று (19.09.2024) மாலை துவங்கிய சோதனையானது இரவு வரை நடைபெற்றதன் முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 258 சொத்து ஆவணங்களும், 68 வங்கி கணக்கு புத்தகங்களும், 75 புரோநோட்டுகளும், 82 நிரப்பப்படாத காசோலைகளும், 18 செல்போன்களும், 84 சிம்கார்டுகளும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கணக்கில் வராத 66 அசல் பத்திரங்களும், பாண்டிச்சேரி மது வகைகள் 31 பாட்டில்களும் இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன. மேற்படி கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை விசாரணையில் தெரிய வருகிறது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், உதவி எண் : 97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision