கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து - பாதசாரிகள் இருவர் காயம்
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவிநாசிக்கு வந்த சதீஷ்குமார் தனது தாய் விஜயகுமாரி மற்றும் தந்தை குழந்தைராஜியுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக காரில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டார்.
காரை சதீஷ்குமார் ஓட்டி வந்த நிலையில் அந்தக் கார் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உள்ள அரியமங்கலம் பால்பண்ணை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலின் தடுப்பு கட்டையில் மோதி முன்பக்க டயர் வெடித்து சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த மூவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் கார் மோதியதில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகளான உக்கடை அரியமங்கலத்தைச் சேர்ந்த பாமீதா பானு, மற்றும் அவரது கணவர் ஜாபர் அலி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சாலையின் நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரை அங்கிருந்தவர் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
காரின் பயணித்த மூவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இருந்தபோதிலும் விபத்து ஏற்பட்ட போது காரில் உள்ள ஏர்பேக் ஓபன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision