பாராளுமன்ற தேர்தல் 2024 - திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரம்

பாராளுமன்ற தேர்தல் 2024  - திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகள்  தீவிரம்

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை எவ்வித சுணக்கமின்றியும், இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படியும் நடத்தி முடித்திட ஏதுவாக, தேர்தல் பணிகள் தொடர்பான பொருள் வாரியாக நோடல் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவரால் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான பொருள் வாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள நோடல் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவரால் விரிவாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் நோடல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமுமின்றியும், இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிபுரிந்திடவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 - ஐ சிறப்பாக நடத்தி முடித்திட மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, ஆவின் பொது மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், முதுநிலை மண்டல மேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர், டாஸ்மாக் ஜி.செந்தில்குமாரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் கே.ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சா.சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன், நோடல் அலுவலர்கள், உதவி நோடல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 2,547 வாக்குச்சாவடி மையங்களுக்கு 12,500 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 81 பறக்கும் படைகளும் அமைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில்உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 22,91,890 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2,547 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு ஒரு சுற்றுக்கு 3 பறக்கும் படை வீதம் 9 தொகுதிகளுக்கும் 81 பறக்கும்படை குழுக்களுக்கு 405 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தலா ஒரு தாசில்தார் தலைமையில் 4 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இதைத்தவிர வட்டார அலுவலர், துணை வட்டார அலுவலர் நிலையிலான 218 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் 16 கண்காணிப்பு அலுவலர்கள், 16 தலைப்புகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இந்தநிலையில் 16 கண்காணிப்பு அலுவலர்களுக்கான அறிமுக ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை அலுவலர், 3 நிலை அலுவலர்கள் என 9 தொகுதிகளில் 2,547 வாக்குச்சாவடிகளுக்கு 10,188 வாக்குச்சாவடி அலுவலர்களும், கூடுதலாக 2,312 அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வீடியோ கண்காணிப்புக்குழு, நிலைக் கண்காணிப்புக்குழு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக அறை ஆகியவை அமைக்கும் பணியும் நடை பெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க 6,635 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3386 கட்டுப்பாட்டு கருவிகள், 4,001 விவிபேட் கருவிகள் உள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision