நீண்ட நேரம் காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள் - கடுமையாக நடத்தும் பணியாளர்கள் - மருத்துவரை தேடும் நிலை
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு வாரம் மற்றும் மாதந்திர பரிசோதனை நடைபெற்று அவர்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. அங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதியும் உள்ளது. மாலை 4:30 மணியிலிருந்து இரவு 8:30மணி வரை மருத்துவர் புற நோயாளிகளை பார்க்க அங்கே வருவார் என்று அறிவிப்பு பலகை உள்ளது.
ஒரு குழந்தையை பெற்ற தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவரை பார்க்க இரண்டு மணியிலிருந்து வந்து விடுகின்றனர். காரணம் முன்கூட்டியே வந்தால் விரைவில் பார்த்து விடலாம் என அங்குள்ள பணியாளர்கள் குறிப்பிடுவதால் அவர்கள் வந்து காத்திருக்கின்றனர்.
மாலை 5.30 மணிக்கு மேல் மருத்துவர் வரும்பொழுது அங்கே பணிபுரியும் உதவியாளர்கள் யாரும் பணியில் இருப்பதில்லை ஒரு சிலர் மட்டுமே பணியில் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காத்திருக்கும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களிடம் அங்கு பணிபுரியும் பணியாளர்கள் கடுமையான வார்த்தைகளை பேசி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக குறிப்பிடுகின்றனர்.
மிக முக்கியமாக ஏற்கனவே குழந்தையை பெற்றெடுத்து கை குழந்தையுடன் அடுத்த குழந்தையை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மாலை நான்கு முப்பது மணிக்கு மருத்துவர் வந்துவிடுவார் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் பெண்களுக்கு ஐந்து முப்பது மணிக்கு தான் மருத்துவர் வருகிறார். முக்கியமாக கர்ப்பிணி பெண்களை அழைத்து வரும் உதவியாளர்கள் உடன் வருபவர்களுக்கு அங்கே அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் இல்லாததால் சாலையில் நிற்கக்கூடிய நிலையில் உள்ளனர்.
உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறித்த நேரத்திற்கு மருத்துவரை வரவைத்து கர்ப்பிணி பெண்களை காக்க வைக்காமல் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அங்கு வரும் பெண்கள் மருத்துவ சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision