உயிருக்கு ஆபத்தான ரசாயன கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்: திருச்சி மாத்தூரில் பரபரப்பு:

உயிருக்கு ஆபத்தான ரசாயன கழிவுகளை கொட்ட முயன்ற லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம்: திருச்சி மாத்தூரில் பரபரப்பு:

மாத்தூர் பகுதியில் தனியார் ஆலைகளுக்கு சொந்தமான ரசாயன கழிவுகளை கொட்ட முடின்ற இரு லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த சில மாதங்களாக தனியார் ஆலைகளுக்கு சொந்தமான குப்பை மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றங்களாலும் தொற்று நோய்களாலும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று காலையும் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலையின் ரசாயன கழிவுகளை இரு லாரிகளில் கொண்டுவந்து மாத்தூர் விவேகானந்தா நகர் பகுதியில் கொட்ட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த குளத்தூர் தாசில்தார் பழனிச்சாமி லாரியில் ஆய்வு மேற்கொண்ட போது லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் தப்பி ஓடி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் உள்ள கழிவுகளை சோதனை செய்து பார்த்தபோது அது மிகவும் ஆபத்தான ரசாயன கழிவுகள் என்பதும், வேறு மாவட்டங்களில் இருந்து மாத்தூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அங்கே மண்ணுக்குள் வெட்டி புதைத்து அளிக்கப்பட்டு வந்திருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்த வட்டாட்சியர் பழனிச்சாமி இரு லாரிகளையும் பறிமுதல் செய்து மாத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகவும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் கொட்டி அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.