பாரத மிகுமின் நிலையத்தில் சுகாதார பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் வினாடி-வினா போட்டி
திருச்சி பாரத மிகுமின் நிலையத்தின் சுகாதாரம் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பிரிவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம், வினாடிவினா போட்டிகள் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சுகாதாரம் பாதுகாப்பு சூழல் பிரிவின் துணை பொதுமேலாளர் திருமாவளவன் வரவேற்புரையாற்றினார். திருமதி சசிகலா அமிழ்த மொழியன் குருவாகோபண்ணா சுற்றுச்சூழல் குறித்த வினாடி-வினா போட்டிகள் நடத்தினர்.
சிறப்பு விருந்தினராக தண்ணீர் அமைப்பின் செயலாளர் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்து கொண்டு "நீரின்றி அமையாது உலகு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் சிறப்புரையில் தமிழர் மரபு நீரை மையமிட்டது, தமிழர் மரபு நீரை மையமிட்ட தாய்வழிச் சமூக மரபு. திணை சார்ந்த தமிழர் வாழ்வில் நிலமும் பொழுதும் முதற்பொருள், ஐவகை நிலங்களிலும் திணைகள் சார்ந்த நீர் மேலாண்மையில் முன்னோடியாக திகழ்ந்தனர்.
இச்சி மரங்களால் ஆன வனங்கள் நிறைந்த பகுதி என்பதாலே மலைக்கோட்டை மாநகருக்கு திரு இச்சி திருச்சி என்ற பெயர் வந்தது என்றார். மரங்கள் என்பது நிலத்தின் நிலத்தடி நீரின் வளமையின் குறியீடு நீர்நிலைகளைப் பாதுகாத்தால் மட்டுமே தலைமுறைகளை பாதுகாத்திட முடியும். திருச்சி என்றாலே காவிரி மட்டுமல்ல உய்யக்கொண்டான் ஆறும் அடையாளம்தான், எனவே நீர்நிலைகளை திறந்தவெளி குப்பைத்தொட்டிகளாய் மாற்றாமல் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து நீர் நிலைகளை மீட்க வேண்டும் என்றார்.
தினந்தோறும் நாம் சுவாசிக்கும் காற்றிலும் ஒரு குவளை நீர் இருக்கிறது, புவிப்பந்தில் யாவும் யாதும் நீராலானது என்றார். ஒவ்வொரு பொருட்களின் உற்பத்திக்குப் பின்னால் உள்ள மறைநீர் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்திட வேண்டும், மறை நீர் குறித்த விழிப்புணர்வின்மையால் இங்கே நமது நீர்வளங்கள் பெரிதும் சுரண்டலுக்கு உள்ளாகிறது.
நீர் என்பது விற்பனைப் பண்டமல்ல, மண்ணின் வளம். மேற்குலக நாடுகளில் ஒவ்வொரு பொருள்களின் உற்பத்திக்குப் பின் உள்ள மறைநீரைக் கணக்கிட்டே பொருள் உற்பத்தி செய்கிறார்கள், ஆனால் வளரும் நாடுகளில் மறைநீர் குறித்து எதுவும் அறியாததினால் யாவற்றையும் இழந்து வருகின்றனர். அன்றாடம் பருகும் தேநீர் தொடங்கி பயன்பாட்டிலுள்ள அனைத்து பொருட்களிலும் மறைநீர் உள்ளதை கணக்கிட்டு நீரைக் காசு போல பாதுகாத்திட வேண்டும்.
நீர்நிலைகளின் தாய்மடியான மேற்குத் தொடர்ச்சி மழையை பாதுகாப்பதன் வாயிலாகவே தென்னிந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாத்து வளர்த்திட முடியும், மழைக்காடுகளை பாதுகாத்து பல்லுயிர்ப் பெருக்கத்தினை வளர்த்து உயிர்க்கோளத்தினை வாழத் தகுதிவாய்ந்ததாக மாற்ற வேண்டும் என்றார். அணி நிழல் காடும் உடையது அரண் என்ற வள்ளுவத்தை பின்பற்றி நீரியல் மேலாண்மையை, நீராதாரங்களை காத்தல் காலத்தின் கட்டாயம்.
துணிப்பைகளை பயன்படுத்தி நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை குறைத்து காலநிலை மாற்றம் என்ற பேரிடரிலிருந்து புவியைக் காத்திட அனைவரும் முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு இப்பிரிவின் பொதுமேலாளர் கங்காதர ராவ் பரிசுகள் வழங்கினார். நிறைவாக துணை பொறியாளர் சரவணன் நன்றி கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLan