குப்பை கொட்டும் இடமாக மாறிய இரயில்வே இடம்- கேட்பாரற்று கிடக்கும் 33வது வார்டு!

குப்பை கொட்டும் இடமாக மாறிய இரயில்வே இடம்- கேட்பாரற்று கிடக்கும் 33வது வார்டு!

திருச்சி மாநகராட்சியில் சுமார் 65 வார்டுகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தூய்மை நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது திருச்சி மாநகராட்சி. ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது மிகவும் அசுத்தமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. 

Advertisement

திருச்சி மாநகராட்சியின் புதிய உத்தியான சாலைகளில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டது, குப்பைகளை குறைக்கவில்லை. பல மடங்கு அதிகரிக்கவே செய்துள்ளது. குப்பை சேகரிக்க ஆட்கள் வராவிடில், சாலையோரங்களில் குப்பைகளை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கின்றனர் மக்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஒருபுறம் நடைபெற, பாதாள சாக்கடை பணிகள் மறுபுறம் நடைபெற,  மற்ற அனைத்து நடவடிக்கைகளிலும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பூஜ்ஜியமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

திருச்சி சுப்பிரமணியபுரம் 33வது வார்டு ஔவையார் தெரு அருகில் கிட்டத்திட்ட கடந்த 5 வருடங்களாக குப்பைகளை அங்கு உள்ள ரயில்வே மைதானத்தில் குப்பைகளை பகுதி மக்கள் கொட்டி வருகின்றனர். இந்த ரயில்வே மைதானம் தான் தற்போது ஜி கார்னராக இருக்கும் பகுதி! 

ஜி கார்னர் பகுதியில் தற்போது தற்காலிக மொத்த வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்தி செல்கின்றனர் மாநகராட்சி பணியாளர்கள், இந்த குப்பைகளையும் எடுக்க வேண்டுமே என்றால் அது  ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது என கைவிரித்து விடுகின்றனர். 

மேலும் 33வது வார்டு ஔவையார் தெரு பகுதியில் இதுவரை குப்பை வண்டிகளும் வரவில்லை என்றும் சாக்கடைகள் அடைத்துக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது இல்லாமல் ரயில்வே இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதிவாசிகள் நோய் தொற்று பரவும் அபாயமும், அவற்றை அப்பகுதியில் ஒரு சிலர் அப்புறப்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் 33வது வார்டு மக்களை கண்டு கொள்ளுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் அப்பகுதி மக்கள்