அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டூர் பாப்பாக் குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
25கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டதின் தொடக்க விழாவில் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், தமிழக பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிக்கல்வித்துறை திட்ட இயக்குனர் சுதன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13ஆயிரத்து 200 அரசு பள்ளிகளில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சியாக வானவில் மன்றமும், நடமாடும் அறிவியல் ஆய்வகங்களும் இன்று தமிழகத்தில் முதன்முறையாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 20லட்சம் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் பாடங்கள் தொடர்பான பரிசோதனை உபகரணங்களை பள்ளிக்கல்வி துறை வழங்கியுள்ளது.இதில் காற்றின் எடை, நீரின் அடர்த்தி உள்ளிட்டவற்றை மாணவர்கள் சுயமாக பரிசோதனை செய்து அறிய முடியும்.மேலும் எண்ணும், எழுத்தும் செய்முறை கற்றல் என்ற அடிப்படையில், கணிதம் தொடர்பான புதிர்களுக்கு சுயமாக விடை காண ஏதுவாக உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) சார்ந்த பாடங்களுக்கான பரிசோதனை உபகரணங்களுடன் கூடிய 150 இருசக்கர மோட்டார் வாகன, நடமாடும் அறிவியல் ஆய்வகத்தின் தன்னார்வளர்கள், ஒன்றியத்திற்கு 20 பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்குகின்றனர். இத்தகைய பணியில் தமிழகம் முழுவதும் 710 தன்னார்வளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிப் பாடங்களோடு தொடர்புடைய அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த பட்ச பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ1200 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களுக்கு சோதனை செய்யும் ஆர்வமூட்ட வேண்டும். ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புைடய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காட்ட வேண்டும்.
குழந்தைகளை கேள்விகளை கேட்க ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வம் உள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
ஸ்டெம் கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தின் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.அறிவியல் நிறுவனங்களுக்கு களப் பயணம் ஏற்பாடு செய்யப்படும்போது, மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கான இந்த முயற்சி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO