ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

ஒழுங்குமுறை விற்பனை கூட வசதிகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழு கட்டுபாட்டின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூர், தாத்தையங்கார்பேட்டை, ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களான நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி போன்ற வேளாண் விளைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலை பெற கிட்டங்கி மற்றும் உலர் கள வசதியுடன் 
உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் 
விவசாயிகளுக்கு மறைமுக ஏலம் மூலம் தங்கள் விளைபொருள்களின் தரத்திற்கேற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

விற்பனை செய்யப்படும் விளைப் பொருட்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி நேரிடையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு 
வைக்கப்படுகிறது. சரியான எடை, உடனடி பணப்பட்டுவாடா, பொருளீட்டுக்கடன் வசதி, குளிர்பதன வசதி, காப்பீடு வசதி, உழவர்நல நிதித்திட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதியும், விளைபொருளை உலர்த்துவதற்கு உலர்கள வசதியும் உள்ளது.

ஒரு விவசாயி அதிகபட்சமாக 
180 நாட்களுக்கு தங்களது விளைபொருளை கிட்டங்கியில் சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலுக்கு 5 பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது. மேலும் விளைபொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத் தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 இலட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியாக 5 சத வட்டி வீதத்தில் கடன் 
வழங்கப்படுகிறது. பொருளீட்டுக்கடன் இருப்பு வைத்த முதல் 15 நாட்களுக்கு எவ்வித வட்டியும் இல்லாத சலுகை வழங்கப்படுகிறது.

விவசாயிகள் ஒரு வருடத்தில் ஒரு மெரிட்க் டன் அளவு விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்திருந்தால் உழவர் நலநிதித்திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள். இவர்கள் விபத்து மற்றும் பாம்பு கடியால் இறந்து விட்டால் ஒரு இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு பிரீமியத் தொகை அரசே ஏற்கிறது. ஆதலால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்ளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்று பயன் அடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn