உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூராய்வு செய்து தர ஆவண செய்யாததை கண்டித்து இரவில் உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் நொச்சிமேடு பகுதியினை சேர்ந்தவர்கள் பிரான்சிஸ் சவேரியார் – சினேகா பிரிட்டோ மேரி (21). திருமணம் முடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வியாழக்கிழமை இரவு சினேகா பிரிட்டோ மேரி விஷமருந்தி உயிரிழந்தார்.
அப்பெண்ணின் உடல் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாலை 6 மணி ஆனதால் உடற்கூராய்வு சனிக்கிழமை தான் செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், உடற்கூராய்வு செய்து உடலை தர சரியான நேரத்திற்கு ஆவண செய்யாத வையம்பட்டி காவல்துறையினரை கண்டித்து இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பும், திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலை கருங்குளம் பிரிவு பகுதியிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மணப்பாறை – விராலிமலை போக்குவரத்தும், நெடுஞ்சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சமரசம் செய்து உடற்கூராய்விற்கு பின் இரவு பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn