விபத்தில் பலியான சிறுமிக்கு சிலை அமைத்து கோவில் - திருவிழா கொண்டாடும் உறவினர்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் டைலர் பழனிச்சாமி (47). இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு காவியா, தனுஜா என்ற இருமகள்களும் சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர்.
இவர்களது இரண்டாவது தனுஜாவிற்கு (இறக்கும்போது வயது 4) கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனைவி மற்றும் குழந்தையை தனது இருசக்கர வாகனத்தில் பழனிச்சாமி மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது பன்னாங்கொம்பு அருகே பைக் மீது பால்வேன் மோதியதில் படுகாயமடைந்த தனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனுஜாவின் இறுதிச் சடங்கு முடிந்த பின் ஒன்பதாம் நாள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் அவரது ஈமக் காரியங்களை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேதமந்திரங்கள் கூறிக் கொண்டிருந்த ஐயர் தனுஜா போல பேசி தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம் எனவும், மூன்று ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கே வருவேன் எனவும், அருள்வாக்கு கூறியுள்ளார்.
இதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பழனிச்சாமியின் தம்பி பாலு என்பவர் சிறுமி தனுஜா போல பேசி தனக்கு கோவில்கட்டி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என அருள் வந்து கூறியுள்ளார். இதன் பின் தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே தனுஜாவிற்கு ஒரு அடி உயர சிலை எழுப்பி கோவில் கட்டியுள்ளனர்.
கோவிலுக்கும் சிறுமியின் பெயரான தனுஜா அம்மன் என்ற பெயரையே வைத்துள்ளனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு பால்குட விழா இன்று காலை வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது.
பின் கோவில் முன் பூக்குழி இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலாபிஷேகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். விபத்தில உயிர்நீத்த மகளுக்கு தந்தை கோவில் கட்டி விழா எடுப்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO