உரிமம் இல்லாத இரண்டு பெண் யானைகள் மீட்பு

உரிமம் இல்லாத இரண்டு பெண் யானைகள் மீட்பு

திருச்சி மாவட்டம், திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம், எம். ஆர் பாளையம் காப்புக்காட்டு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மத்திய விலங்கு காட்சியக ஆணையம்  (Central zoo Authority) அனுமதியுடன் தமிழ் நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் ஏழு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி மதுரை மற்றும் தூத்துக்குடி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும்,

மேலும் யானைகளை பிச்சை எடுக்க வைத்தும் யானைகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை செய்யாமலும் துன்புறுத்துவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பெயரில் சுமதி என்ற 56 வயது மதிக்கத்தக்க பெண் யானையை திருச்சி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டதால் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வயது முதிர்ந்த 65 வயதிற்கு மேற்பட்ட செரிமானம், கண்பார்வை குறைபாடு உடைய கீரதி என்ற பெண்  யானையை உரிமம் பெறாமல் தலைமை வன உயிரின காப்பாளரின் அனுமதியின்றி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்தியதால் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலரின்

அறிக்கையின் பெயரில் தலைமை வன உயிரின பாதுகாவலரின் ஆணையில் மேற்கண்ட, பெண் யானையினை யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. புதிதாக வரப்பெற்ற சுமதி , கீரதி ஆகிய பெண் யானைகளை மாவட்ட வன அலுவலர், வனத்துறை கால்நடை மருத்துவர்கள், உதவி வன பாதுகாவலர்கள் மற்றும் வனச்சரக அலுவலர் ஆகியோர் யானைகளை ஆய்வு செய்தார்கள் .

அதில் வன கால்நடை மருத்துவ அலுவலர் அவர்கள் யானைகளை பரிசோதித்து அதன் வயது, உடல் நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைகளுக்கு வழங்கப்பட வேண்டிய திட உணவுகள், பசுந்தீவனம், காய்கறிகள், பழங்கள் ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவைகள் குறித்து அறிக்கை வழங்கியதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO