கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மற்றும் இதயா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி அவர்கள் தலைமையில் இன்று (04-01-2025) நடைபெற்றது.
சாலை விபத்துக்கு பெரிதும் காரணம் அவசரமா, அலட்சியமா, அறியாமையா என்கின்ற தலைப்பில் கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி தலைமை ஏற்றத்துடன் நடுவராகவும் இருந்து பட்டிமன்றத்தை நடத்தினார். கல்லூரி மாணவியர்கள் செல்வி.சபானா, செல்வி.ஐஸ்வர்யா, செல்வி.குழலி, செல்வி.சனா, செல்வி.ஜனனி, செல்வி.நாகவள்ளி ஆகியோர் பட்டிமன்றத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதியாக பட்டிமன்ற நடுவராக இருந்த நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி பேசியதாவது..... சாலை விபத்துக்கள் தவிர்ப்பதற்காக மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையினர் அலட்சியமாகவும், அவசரமாகவும் வேகமாக செல்லாமல் நிதானமாகவும், கவனமாகவும் பயணித்தால் விபத்துகளில் சிக்காமல் நல்லதொரு வாழ்க்கையை வாழலாம்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிவதோடு சாலை விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும். பேருந்துகளில் பயணிக்கும் பொழுதும் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். சாலை பாதுகாப்பு குறித்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்லூரிகளில் நடத்தினால் மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பெறுவதோடு அவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வார்கள்.
காலதாமதமாக புறப்பட்டு அவசரஅவசரமாக சாலை விதிகளையும், சமிக்ஞைகளையும் (Signals) கவனிக்காமல் அலட்சியமாக செல்லும் போது தான் விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே, குறித்த காலத்தில் பணிகளை திட்டமிட்டு செயல்பட்டால் விபத்துகளை குறைக்கலாம். 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களிடம் வாகனங்களை கொடுக்காமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தேவையான அறிவுரைகளையும் வழங்க வேண்டும்.
அதிவேகம், கவனச்சிதறல், கவனக்குறவு சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, படியில் பயணம் மற்றவர்கள் பற்றிய சிந்தனை, கவலையின்மை, தவறான வழியில் OVER TAKING செய்வது, ஓடும் பேருந்தில் ஏறுவது, பேருந்து நிற்கும் முன் இறங்குவது, போதிய இடைவெளியின்றி வாகனத்தை இயக்குவது, வளைவுகளை முந்தி செல்வது , சாலை சந்திப்புகளை கவனமின்றி கடப்பது. ஆளில்லா இரயில்வே கேட்டை கடப்பது போன்றவை விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது, சாலை சந்திப்புகளை அலட்சியமாக கடப்பது. சாலையில் வாகனத்தை பார்க் செய்வது, இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்வது. சாலையில் குழந்தைகளை விளையாட விடுவது போன்றவைகளும் விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளது. இவற்றை தவிர்ப்பதோடு மாணவியர்கள் மற்றவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிந்து பயணித்தால் சாலை விபத்தை பெரிதும் தவிர்க்கலாம். விபத்திற்கு முக்கிய காரணம் அதிவேகம் மற்றும் கவனக்குறைவு. அதிவேகம் மற்றும் கவனக்குறைவிற்கு முக்கிய காரணம் அவசரம். அவசரத்திற்கு முக்கிய காரணம் கால மேலாண்மையில் உள்ள அலட்சியமாகும். தெளிவான சிந்தனையும் விபத்து பற்றிய பின்விளைவுகளையும் நன்றாக தெரிந்திருந்தாலும் விபத்துகளை தவிர்க்கலாம்.
எனவே, மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையோடு முன்னேறி தங்கள் வாழ்க்கையில் இனிய பயணமாக பயணிக்க கேட்டுக் கொள்கிறேன். விபத்து ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் அறியாமைக்கும், அவசரத்திற்கும் அடிப்படையாக உள்ள அலட்சியம் தான் பெரிய விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, அனைவரும் விழிப்போடு இருந்து விபத்துகளை தவிர்ப்போம் என நிர்வாக இயக்குனர் தீர்ப்பளித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் S.ஶ்ரீதரன், துணை மேலாளர் S.ராஜேஸ், இதயா கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, உதவி பொறியாளர்கள் G.ராஜ்மோகன், D.சரவணக்குமார், கல்லூரி மாணவியர்கள் அரசு போக்குவரத்துக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision