பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக சிறுகனூர் பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களை சுற்றித்திரிந்தவர்கள் மீது 200 ரூபாய் அபராதம் விதித்தும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் உயரதிகாரிகள் உத்தரவிட்டிருதனர்.

அதன்படி திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல் ஆய்வாளர் சுமதி கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்திருந்தார்.

ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1700 மதுபாட்டில்களை வெளியே எடுத்து சென்று ரூபாய் 2 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து காவல் உயர் அதிகாரி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் சிறுகனூர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியாற்றி வரும் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் தலைமை காவலர் ராஜா ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF