வணிகர்களுக்கு எதிரான அரசு அதிமுக, ஆதரவான அரசு திமுக!-வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரை

வணிகர்களுக்கு எதிரான அரசு அதிமுக, ஆதரவான அரசு திமுக!-வணிகர் விடியல்  மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உரை



 திருச்சியில் இன்று ( 5 - ந் தேதி) நடைபெற்ற தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வணிகர்களும்  பங்கேற்றனர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 - வது வணிகர் தினத்தை முன்னிட்டு,  தமிழக வணிகர் விடியல் மாநாடு  நடத்தப்பட்டது. அதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் புத்தகம் கொடுத்து வரவேற்றனர்.

இம்மாநாட்டிற்கு பேரமைப்பின் மாநில தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சமேளனத்தின் தேசிய முதன்மை துணைத்தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார் 

மாநாட்டிற்கு வந்திருந்த வணிகர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிகளும் , மக்கள் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, முதுபெரும் வணிகப் பெருமக்களுக்கு வ.உ.சி. வணிகச் செம்மல் விருதுகளை வழங்கினார். மேலும் நலிந்த வணிகர்களின் வாரிசுகளுக்கு க.மோகன் நினைவாக கல்வி ஊக்கத்தொகை வழங்கி விழா பேருரையாற்றினார்.

இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசிய போது....

சட்டமன்ற கேள்வி நேர நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாநாட்டுக்கு வந்திருக்கிறேன். பெறும்பாலும் நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர் கட்சியாக இருந்தாலும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பது கிடையாது. இருந்த போதும் விக்கரமராஜாவின் மீதுள்ள அன்பால் மறுப்பேதும் பேசாமல் மாநாட்டில் பங்கேற்க ஒப்புக்கொண்டு வந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல கொரோனா காலத்தில் நெருக்கடியான காலத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை வாரிவழங்கியவர்கள் வணிகர்கள்.  அதற்கு நன்றி சொல்லத்தான் இந்த மாநாட்டுக்கு வர ஒத்துக்கொண்டேன்.

தமிழ்நாட்டில் அதிமுக அரசு கொண்டுவந்த நுழைவுவரிக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்தி சிறை சென்ற தினம் மே.5.தற்போது நடப்பது திமுக அரசு. இது நம்முடைய அரசு.

வணிகர் நல வாரியத்தில் 
பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 84,104 பேர். இதில் இதுவரை 8,875 வணிகர்கள் பலன் பெற்றுள்ளனர்.வணிகர்களுக்கு சாதகமாகா GST மன்றத்தில் வரிச்சலுகைகளையும், சில வரிகள் கைவிடுதலையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இதுவரை 65 வரிகளை மாநில அரசு கைவிட்டுள்ளது.தீ விபத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உடனடி நிவாரணமாக ₹5000 வழங்கப்பட்டடுவந்தது. அது இனி ₹20,000 மாக வழங்கப்படும். வணிகர் உயிர்இழந்தால் நலவாரியம் சார்பில் வழங்கப்பட்டுவந்த ₹1 லட்சம் இழப்பீடு, ₹3லட்சமாக உயர்த்திவழங்கப்படும்.

வணிக நிறுவனங்கள் இனி 3 ஆண்டுக்கு ஒருமுறை உரிமை பெற்றால் போதும்.இனி உடற்பயிற்சி கூடங்களுக்கு உரிமம் தேவையில்லை. சாலை விரிவாக்கத்தின் போது பாதிக்கப்படும் வணிகர்களுக்கு,  உள்ளாட்சி அமைப்பு வாடகை கட்டிடங்களை வழங்குவதில்  முன்னுரிமை வழங்கப்படும்.

இம்மாநாட்டில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO