வாகனங்களின் நம்பர் ப்ளேட்டுகளில் சட்டத்தை மீறுபவர்கள் - அம்பலபடுத்தும் காவல்துறை
சட்டங்களும், விதிகளும் மக்களின் நன்மைக்காகவே விதிக்கப் படுகின்றன. இதை அறியாமல், அரசு விதிக்கும் சட்டங்கள், விதிகளை மீறுவதை சிலர் முழுநேர செயல்பாடாகவே கொண்டிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கது வாகன நெம்பர் பிளேடுகளில் செய்யப்படும் விதிமீறல்கள். இது தொடர்பாக போக்குவரத்துத்துறை கடும் நடவடிக்கை மேற்கொண்டு, ஆர்வக் கோளாறுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு.
அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்துத்துறையால் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. அப்போது, ஒவ்வொரு வாகனத்துக்கும் பிரத்யேக பதிவெண் வழங்கப்படுகிறது. வாகனத்தின் முன்னும், பின்னும் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவு எண் மூலம், வாகனம் திருடுபோனாலோ, விபத்து காலத்திலோ அடையாளம் காண முடிகிறது.வாகனத்தின் பதிவு எண்ணுக்கு முன்னால், வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் பெயரும், அந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக எண்ணும் குறிப்பிடப்படுகிறது.
சிலர், 8055 என்ற பதிவு எண்ணை ‘BOSS’ எனவும், 5181 என்பதை ‘SIBI’ என்றும், 9061 என்பதை ‘GOBI’ என்றும் எழுதி வருகின்றனர். மேலும் பலர், தங்களது வாகன நம்பர் பிளேட்டுகளில், தங்களுக்குப் பிடித்த தலைவர்கள், நடிகர்களின் படங்கள், பெயர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள், வாசகங்கள், கருத்துகள் என, வாகனப் பதிவு எண்களை படித்தறிய முடியாத அளவுக்கு ‘ஸ்டைலான’ வடிவத்திலும், வண்ணத்திலும் மாற்றி எழுதி வைக்கின்றனர். இறுதியில், சிறிய அளவில் கடமைக்காக வாகனப் பதிவு எண்ணை எழுதுகின்றனர்.
இதனால், அந்த வாகனம் விபத்துக்கு உள்ளானாலோ அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாலோ, உடனடியாக அந்த வாகனத்தின் பதிவு எண்ணைத் தெரிந்துகொள்ள முடியாத நிலை உருவாகிறது. இதனால், குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பிச் செல்லவும் வழி ஏற்படுகிறது. எனவே, போலீஸாரும், போக்குவரத்து துறையும் இணைந்து, விதிகளை மீறி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடன் வலம் வரும் வாகனங்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என காவலர் கந்தசாமி கூறியபோது, “1989-ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51-ன்படி, அனைத்து வாகனங்களிலும் ‘நம்பர் பிளேட்’ பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதில், பதிவெண் தவிர எந்தவிதமான பெயர்களோ, வாசகங்களோ இருக்கக்கூடாது. தங்கள் விருப்பம்போல எழுதப்படும் ‘ஃபேன்சி’ எழுத்துகளுக்கும் அனுமதி இல்லை. மோட்டார் வாகன விதிமுறைப்படி, இருசக்கர வாகனத்துக்கு முன்புற நம்பர் பிளேட்டில் எழுத்து மற்றும் எண்கள் 30 மில்லிமீட்டர் உயரம், 5 மி.மீ. தடிமனுடன்,5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.
பின்புறம், எழுத்தும், எண்களும் 40 மி.மீ. உயரம், 7 மி.மீ. தடிமனுடன், 5 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும்.கார் மற்றும் 4 சக்கர வாகனங்களின் முன், பின்புறங்களில் எழுத்து மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரம், 10 மி.மீ. தடிமனுடன், 10 மி.மீ. இடைவெளியில் இருக்க வேண்டும். வாடகை வாகனங்களில் மஞ்சள் பின்புலத்தில், கருப்பு நிறத்தில் பதிவெண்கள் எழுதப்பட வேண்டும். சொந்த வாகனங்களில் வெள்ளை பின்புலத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துகள் இருக்க வேண்டும். பதிவெண்கள், வாசிக்க சிரமமில்லாத எழுத்துகளில் இருக்க வேண்டும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO