ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 11ம் அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.
அதனை தொடர்ந்து வரும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான இன்று (19.04.2023) சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
பின்னர் திருத்தேரின் வடத்தை பிடித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரானது நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தேரோட்டத்தை காண்பதற்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்திற்காக திருச்சி மாவட்டத்திற்கு இன்று (19.04.2023) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.