ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி நம்மாழ்வார் மோட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடந்துவந்த வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவுபெற்றது.

Advertisement

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் 21 நாட்கள் நடைபெறும். டிசம்பர் 14ம் தேதியன்று பகல்பத்து திருவிழா தொடங்கியது.

முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு (டிசம்பர் 2020) 25ம்தேதி அதிகாலை நடந்தது. இதையடுத்து நடைபெற்றுவந்த இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நேற்றையதினம் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது தினசரி திறக்கப்பட்டுவந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8 மணியுடன் மூடப்பட்டது. 

21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. காலை நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணடந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து நம்பெருமாள் காலை 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெற்றது.