நோய் தொற்று பகுதியாக மாறி வரும் ஸ்ரீரங்கம் - நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி நிர்வாகம்?

நோய் தொற்று பகுதியாக மாறி வரும் ஸ்ரீரங்கம் - நடவடிக்கை எடுக்குமா திருச்சி மாநகராட்சி நிர்வாகம்?

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் கடந்த ஒரு மாத காலமாகவே பல பகுதிகளில் கருப்பழுப்பு - மஞ்சள் நிறமாக குடிநீர் வருகிறது. இதனால் ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் இதனை உபயோகப்படுத்தும் மக்களுக்கு காய்ச்சல், கை, கால் வலி, வாந்தி, பேதி, தலைச்சுற்றல், அஜீரணக்கோளாறுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏராளமான மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் முடிந்து திருச்சி மாநகராட்சியில் சொத்துவரி உள்பட வரிங்களை உயர்த்தி உபரி பட்ஜெட் காட்டினாலும், பல திட்டங்கள் அம்ரீத் - ஜல்சக்தி உள்ளிட்ட பெயர்களில் நிதி ஒதுக்கி ஸ்மார்ட் சிட்டிக்கு பல நூறு கோடிகள் நிதி ஒதுக்கியும் உருப்படியாக மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பலதெருக்களில் மேன்ஹோல் வழியே UGD துர்நாற்றத்துடன் நீர் வெளியேறி ஓடுவதும் நீடிக்கிறது. பிரதான சாலைப் பணிகள் - சாக்கடை - வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் கடந்த ஆட்சி இறுதியில் துவங்கி இன்றுவரை முடியவில்லை. புதிதாக போடப்பட்ட தெருச்சாலைகள் பலவும் இவ்வளவு மோசமாக உள்ளது என்கின்றனர். பல தெருக்களுக்கு நாள் தோறும் குப்பை சேகரிப்பு சீராக இல்லை. டெங்கு பீதி நிலவும் நிலையில் உருப்படியாக கொசுமருந்து தரமாக அடிக்கவில்லை.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கையூட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசிய உள்ளாட்சி சேவைகளை தரமாக நிறைவேற்றவேண்டும். இது போன்ற அவலங்கள் படும் துயரங்களை மாநகர பகுதிகளில் கண்டுபிடித்து தீர்க்க வேண்டிய நகர் நல அலுவலர் எங்கே? அவர் பணி என்ன? அரசு சம்பளம் வாங்குவதா? கட்டிட பணி நடைபெறும் இடங்களிலும், புதிய பெயரில் வரி போடும் பணியிலும் கையூட்டு பெற்று காட்டும் அக்கறையை இங்கு வாழும் மக்கள் நலனில் காட்ட வேண்டும் என்பதே மக்களின் தாக்கமாக உள்ளது.

எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இதில் தலையிட்டு உடனடி தீர்வு கண்டு இங்கு வாழும் மக்களை காக்க வேண்டும். நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரின் சொந்த தொகுதி மாவட்டத்திலேயே இந்த அவலநிலை என்றால் இதனை யாரிடம் போய்சொல்வது?..... என்று ஸ்ரீரங்கம் மக்கள் புலம்புகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision