திருச்சி மாவட்டத்திற்கான உரங்களை வெளிமாவட்டத்திற்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை!
திருச்சி மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடந்து வருகிறது. நடப்பு காணிப் பருவத்திற்கு சாகுபடி பரப்பு 56000 ஆயிரம் எக்டேர் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப யூரியா,டி.ஏ.பி.பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஷ் போன்ற உரங்கள் போதிய அளவில் தனியார் உரக்கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் உர விற்பனையை கண்காணிக்க அனைத்து வட்டார உர ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவில் நீர் இருப்பு உள்ள நிலையில் முக்கிய இராசாயன உரங்களான யூரியா 5073 மெ.டன்,டிஎபி2328 மெ.டன், பொட்டாஷ்3114, காம்ப்ளக்ஸ் 7600மெ.டன், என்ற அளவில் மாவட்டம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் 545 உர மாதிரிகள் எடுக்கப்பட்டு அதில் 36 உர மாதிரிகள் தரமற்றவைகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்.. "உர விற்பனையாளர்கள் உரிமம் பெறாமல் உரங்கள் விற்பனை செய்வது உரிமம் இல்லாத குடோன்களில் உரங்கள் இருப்பு வைப்பது அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரங்களை விற்பது விற்பனை இரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருப்பது, பதிவேடுகள் விற்பனை முனைய கருவியின் இருப்புகள் ஆகியவற்றை சரிவர பராமரிக்காமல் இருப்பது ,உர கட்டுப்பாட்டு சட்டம்1985-ன் படி தண்டனைக்குறிய குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும். மேலும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விற்பனை முனைய கருவியின் மூலம் மட்டுமே உரங்களை வாங்க வேண்டும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள் பி ஓ எஸ் கருவி மூலமாக மட்டுமே விவசாயிகளுக்கு விற்கப்பட வேண்டும்.அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கென மத்திய மாநில அரசுகளினால் ஒதுக்கீடு செய்யப்படும் யூரியா போன்ற உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பக்கூடாது.தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மானிய விலையிலான உரங்கள் இம்மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படும் உரங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.நேரடி விவசாயத்திற்கு மட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலவை உரங்கள் தாயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் மானிய உரங்களை மூலப்பொருளாக பயன்படுத்தலாம்.
இவற்றைத்தவிர பிற உபயோகங்களுக்கு பயன்படுத்துவது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 பிரிவு 25-ன் படி குற்றமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.