இளமை காலத்தை இழந்த மாணவி - உதவிக்கரம் தேடும் குடும்பம்!!
துள்ளித் திரிய வேண்டிய பள்ளி வயதில் உடல் உபாதைகளுக்கு கூட உதவி வேண்டி நிற்கிறது இச்சிறுமியின் உடல்நிலை! புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் ஒவ்வொரு முறையும் கொரோனா பிசிஆர் பரிசோதனையும் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் ஏழை குடும்பம்! ஓடியாடி விளையாட வேண்டிய மகள் அசைவற்ற நிலையில் அமர்ந்திருப்பதை கண்டு வேதனையில் வெம்புகிறது பெற்றோர்களின் மனம்!
காலில் ஏற்பட்ட ரத்தக்கட்டு நாள் பட்டதால் புற்றுநோய் கட்டியாக மாற அன்றாட உணவிற்கு அல்லல்படும் இந்த குடும்பம் மருத்துவ செலவிற்கு என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வருகிறது.
திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை, பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் வெங்கடேஸ்வரி, செல்வ பெருமாள் தம்பதியினரின் மூன்றாவது மகள் ராஜலட்சுமி. பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு படிக்க வேண்டிய மகள் புற்றுநோய் கட்டியினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ராஜலட்சுமியின் தந்தைக்கு விபத்து ஒன்றில் இரண்டு கால்களும் காயம் அடைய வேலைக்கு செல்ல இயலாத சூழலில் கொரோனா பொது முடக்கம் கிடைக்கும் சொற்ப வருவாயையும் நிறுத்திவிட்டது.
அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வது என்று அறியாமல் நிலை தடுமாறி நிற்கும் இந்த குடும்பம் மகளின் புற்று நோய்க்கு எப்படி மருத்துவம் பார்க்கும்? கொரோனா பொது முடக்கம் காரணமாக உரிய மருத்துவம் பார்க்க இயலவில்லை என்றும், புற்றுநோய் கட்டி நான்காவது நிலையை அடைந்துள்ளதால் ஆறுமுறை கீமோ சிகிச்சை கொடுத்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.
அரசின் காப்பீட்டுத் திட்டமும் பெரிதும் கைகொடுக்காத நிலையில், ஒருமுறை கீமோ சிகிச்சை செய்யவே 30,000 வரை தேவைப்படும் நிலையில், எப்படியோ முடிந்தவரை பணம் திரட்டி மூன்று முறை கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இன்னும் மூன்று முறை சிகிச்சை செய்வதற்கு பணம் இன்றி செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது இந்த ஏழை குடும்பம்.
கீமோ சிகிச்சைக்கு ஒருபுறம் பணம் செலவாகிறது என்றால் அதற்கென ஒவ்வொரு முறையும் கொரோனா நோய் தொற்று பிசிஆர் பரிசோதனை எடுக்கவேண்டிய சூழல் உள்ளதாகவும், அதற்கு 4 ஆயிரம் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கு சிகிச்சை செய்யவே இயலாத தங்களுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை பேரிடியாக உள்ளது என்கிறார் ராஜலட்சுமியின் தந்தை செல்வ பெருமாள்!
அன்றாட தேவைகளுக்கு அல்லல்படும் பெற்றோர்களுக்கு, தனக்கு ஏற்பட்டுள்ள புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது என்பது இயலாத விஷயம் என்றும், தன்னுடைய சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்றும் உதவிக்கரம் வேண்டுகிறார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பதினேழு வயது இளம்பெண் ராஜலட்சுமி! வாழ்க்கை பாதையை புதிதாய் தொடங்கவேண்டிய பதின்பருவத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடுத்த அடி எடுத்து வைக்க இயலாமல் தவிக்கும் இப்பெண்ணுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.