திருச்சியில் இன்று இரவு முதல் 24 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 02, 09, 16, 23 மற்றும் 30 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் ( சனிக்கிழமை நள்ளிரவு 12:00 முதல் திங்கட்கிழமை காலை 06:00 மணி வரை) எவ்வித தளர்வுகளுமின்றி முழுவதும் முழு ஊரடங்கு (Complete Lock Down) அமல்படுத்தப்பட உள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவையான பால் விநியோகம், மருத்துவ மனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பரவுதலை தடுத்தல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசால் எதிர்வரும் 31.08.2020 நள்ளிரவு 12:00 மணி வரை ஊரடங்கு (Lock Down) உத்தரவினை நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாணை எண்.396, வருவாய் மற்றும் பேரிடர் தணிக்கும் துறை நாள் 31.07.2020 நாளிட்ட ஆணையின்படி இந்த மாதத்தின் 5 ஞாயிற்றுக் கிழமைகளில் (சனிக்கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் திங்கட்கிழமை காலை 06:00 மணி வரை) எவ்வித தளர்வுகளுமின்றி திருச்சி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு (Lock Down) அமல்படுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவையான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது. தனியார் வாகனங்கள் அவசர மருத்துவ சிகிச்சை உதவிக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.மேலும்,கோவிட்-19 நோய் தடுப்பு அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் அடையாள அட்டையுடன் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கோவிட்-19 நோய் தொற்று பரவுதலை தடுத்திடும் நோக்கில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.