உணர்வுகளை உருவங்களாக மாற்றிய எமோஜி- சிறப்பு பதிவு..!!

உணர்வுகளை உருவங்களாக மாற்றிய எமோஜி- சிறப்பு பதிவு..!!

வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத செய்திகளை சிறிய அனிமேஷன் முகங்களால் வெளிப்படுத்துவது தான் எமோஜிக்கள். அதை கொண்டாடும் நாள் தான் இன்றைய ஜூலை 17.

டெக் உலகில் நீண்டதொறு அங்கமாகி விட்ட எமோஜிக்களுக்குமரியாதை செய்யும் நாளாக 2014ம் ஆண்டில் ஜூலை 17ம் தேதி குறிக்கப்பட்டது. அன்று முதல் எமோஜிக்கள் தினம் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

எமோஜிக்கள் மனிதனின் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு மாற்றியிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது வியப்பைத் தவிர வேறொன்றும் தோன்றுவதில்லை. ஓலையில் எழுதி, பறவைகளில் வைத்துத் தகவல் பரிமாறிய காலத்திலிருந்து, கடிதம் எழுதியது, தந்தி அடித்தது, டெலிபோனில் பேசியது எனப் பலவித மாற்றங்களைத் தகவல் பரிமாற்றம் கண்டிருக்கிறது.

உறங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கடந்த பத்து ஆண்டுகள் முன்பு வரை ஒரே மாதிரியாகத்தான் தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். எமோஜி வந்தது தான் தாமதம். கண்களை மூடிய எமோஜியின் தலையில் zZZ என எழுதியிருக்கும் ஒரே ஒரு எமோஜியை அனுப்பிவிட்டு மீண்டும் உறங்கச் சென்றுவிடுகின்றனர்.

எமோஜிக்கள் பரவலாகிக்கொண்டிருந்த தொடக்க காலத்தில் ஆப்பிளின் மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வெள்ளைத் தோற்றத்துடன் கூடிய உருவங்கள் மட்டுமே எமோஜிக்களாக உருவாக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு ஆப்பிளுக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தது. ஜப்பானில் உருவாகி வளர்ந்தாலும், எமோஜிக்கள் ஆப்பிளின் எல்லைக்குள் நகர்ந்தபோது இந்த விமர்சனம் எழுந்தது ஆப்பிளுக்கும் விரும்பத்தகாத நிகழ்வாக இருந்தது.

Advertisement

ஒரு முன்னணி நிறுவனம், தன்னைப் பாரம்பரிய நிறுவனம் என்று மார்தட்டிக்கொள்ளும் பிரபலமான நிறுவனம் ஒரு பொருளைத் தனது வியாபாரச் சந்தைக்குள் எடுக்கும்போது எப்படிப்பட்ட முன்னெச்சரிக்கைகளையும், சமத்துவத்தையும் கவனிக்க வேண்டும் என்பதில் ஆப்பிள் கோட்டைவிட்டதாகப் புகார் சொல்லப்பட்டது. அதன் நீட்சியாக, எங்கு தன்னை விமர்சனத்துக்குள்ளாக்கினார்களோ அதே இடத்தில் தன்னை முன்னிலையில் நிறுத்த ஆப்பிள் எடுத்த முயற்சிதான் இவ்வருட புதிய எமோஜிக்கள் வெளியீடு.

வெள்ளை நிறத்தில் எமோஜிக்கள் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் கறுப்பு நிறத்தில் எமோஜிக்கள் வெளியிடப்பட்டன. ‘இந்த இரண்டு மட்டும்தான் உலகில் நிறமா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலை முதலில் ஆப்பிள் கூறியிருக்கிறது.

சிவப்பு நிறம் கலந்த மேனி உடையவர்கள், சிவப்பு சிகை கொண்ட மக்கள், தங்க நிறம் மற்றும் வெள்ளை நிற சிகை கொண்டவர்களுக்கென தனித்தனி எமோஜிக்களை ரிலீஸ் செய்திருக்கிறது ஆப்பிள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இணையத்தில் சுற்றும் எமோஜிக்களைப் பயன்படுத்துவதில் அதிகம் பங்கெடுத்திருக்கிறது என்று உலகின் முன்னணி சமூக வலைதளங்கள் தெரிவித்திருக்கின்றன.

ஃபேஸ்புக் மற்றும் அதன் மெசேஜ் அனுப்பும் தளமான மெசெஞ்சரில் 2800 எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் 2300 எமோஜிக்கள் தினமும் அதன் யூசர்களால் பயன்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கில் 70 கோடி எமோஜிக்களும், மெசெஞ்சரில் 90 கோடி எமோஜிக்களும் தினமும் பதிவிடப்படுகின்றன. இவற்றில் அன்பின் குறியீடாக அனுப்பப்படும் எமோஜி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கடந்த வருட பயன்பாட்டைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும் கூறுகிறது ஃபேஸ்புக். 2017 ஜூன் முதல் 2018 ஜூலை வரையிலான காலத்தில், 2018ஆம் ஆண்டின் ஆங்கிலப் புத்தாண்டினை முன்னிட்டு ஒரே நாளில் அதிக எமோஜிக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ட்விட்டரில் அழுதுகொண்டே சிரிக்கும் எமோஜி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து, வேண்டுதல், சிரிப்பு, நெருப்பு, முத்தம் ஆகிய எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பக்கம் பக்கமாக வார்த்தைகளை எழுதிப் புரிய வைத்த தகவல்களை ஒற்றை எமோஜியின் மூலம் சொல்லிவிடும் காலம் வருமென்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அந்த எமோஜிக்களே ஒவ்வொருவரின் அடையாளமாக மாறிவிட்டன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP