திருச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு?

திருச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு?

அனைவரும் ஆர்வத்துடன் உற்றுநோக்கும் தொகுதிகளில் ஒன்று, திருச்சி நாடாளுமன்றத் தொகுதி. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பரவியுள்ள தொகுதி. அதேபோல், முக்குலத்தோர், ரெட்டியார், கவுண்டர், வன்னியர், தலித்துகள் எனப் பல்வேறு சமுதாயத்தினரும் நிறைந்துள்ள தொகுதியான திருச்சியில் மத அடிப்படையிலோ, சாதி அடிப்படையிலோ இதுவரையில் யாரும் வெற்றிபெற்றதில்லை. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாயங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் திருச்சி தொகுதி வாக்காளர்கள். 

அதேபோல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுந்து, எந்தக் கட்சியும் திருச்சியைச் ஒந்தம் கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர் திருச்சி வாக்காளர்கள். போட்டியிடும் வேட்பாளரையும், அவர் சார்ந்துள்ள கட்சியின் செயல்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்கும் முதிர்ச்சி பெற்ற திருச்சி வாக்காளர்கள், எதன் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்பவர்கள். பாசக்காரத் திருச்சி வாக்காளர்கள், ஏமாற்றுவோரைத் தூக்கி எறியவும் தயங்கமாட்டார்கள் என்பது கடந்த காலத் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்போருக்குப் புரியும்.

இத்தகைய வாக்காளர்கள் இந்தமுறை யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை அறியத் தமிழகமே ஆவலுடன் காத்திருக்கிறது. திமுக கூட்டணியில் கடந்தமுறை காங்கிரஸ் வசமிருந்த இந்தத் தொகுதி தற்போது மதிமுகவுக்குக் கைமாறியுள்ளது. அதிமுக நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைப் போராடிப் பெற்ற மதிமுக, மக்களுக்கு நன்கு அறிமுகமான சின்னமோ கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போ கிடைக்காததால் திணறி வருகிறது. தங்களது தொகுதியைத் தட்டிப் பறித்துவிட்டதாக மதிமுக மீது கோபம் கொண்டுள்ள காங்கிரஸ் ஒருபுறம், தொடர்ந்து மற்றவர்களுக்கே காவடி தூக்கவேண்டுமா என்ற கொந்தளிப்பில் திமுக மறுபுறம் என கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டு நிற்பதால் செய்வதறியாது தவிக்கிறார் மதிமுக வேட்பாளர் துரை வைகோ. 

திருச்சி திமுக கோட்டையைக் கட்டியாள்பவராகக் கருதப்படும் அமைச்சர் நேரு, தனது மகன் அருண் நேரு போட்டியிடும் பெரம்பலூர் தொகுதியில் கவனம் செலுத்த, அவரது ஆதரவாளர்களும் அங்கு செல்லத்தொடங்கியது மதிமுகவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

தங்களைக் கண்டுகொள்ளாத துரைவைகோவை தாங்களும் கண்டுகொள்ளப் போவதில்லை என திமுக கவுன்சிலர்களும் கழன்றுகொண்டதால் அவரது நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

திமுக மேலிடத்துக்கு நிலைமையை எடுத்துச்சொல்லி, சாட்டையைச் சுழற்றினால்தான் காரியம் நடக்கும் என்ற நிலையில் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தீப்பெட்டி சற்றே நமுத்துப்போய் உள்ளது என்றாலும் திமுக தலைமை சற்று உக்கிரம் காட்டினால் தீக்குச்சி பற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. 

அதிமுகவைப் பொருத்தவரை, திருச்சி தொகுதியில் தனது ஆதரவாளரான கருப்பையாவை வெற்றிபெறச் செய்வதற்குக் கடும் பிரயத்தனம் செய்துகொண்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பொறுப்பாளர்களுக்குப் பல பரிசுகளை அறிவித்துள்ளதால் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுக பிரசாரம் தீவிரமடைந்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றன. எடப்பாடியாரின் பொதுக்கூட்டத்திற்குத் திரண்ட கூட்டம் அதிமுகவினருக்குக் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பாரதிய ஜனதா கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பெறும் வாக்குகளே வெற்றிவாய்ப்பு யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் என்ற கணக்கும் போடப்பட்டு வருகிறது. இருப்பினும் பாரதிய ஜனதா கூட்டணியின் பிரசாரம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது என்பதால் இலைத்தரப்பு மட்டும் இப்போதைக்கு உற்சாகமாக உள்ளது. 

இனிவரும் நாட்களில் யாருடைய வேகம் அதிகரிக்கிறதோ, அவரே வெற்றிக்கோட்டைத் தொடுவார் என்பதே திருச்சி தொகுதியின்  தற்போதைய நிலவரமாக இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision