ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் திருவிழா -கொடியேற்றம்
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் 9-ஆம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தை தேர் திருவிழா இன்று முதல் தொடங்கி 19 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.கொடியேற்றத்தை முன்னிட்டு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார்.அதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது..
இன்று முதல் தை தேர் திருவிழா உற்சவ நாட்களில் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் நெல் அளவை கண்டறியும் நிகழ்ச்சி 15ஆம் தேதி அன்றும், நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி 16ஆம் தேதி அன்றும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகின்ற 17 ம் தேதியன்று நடைபெற இருக்கின்றது,
அன்றைய தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் வலம் வருவார், ஆனால் தற்பொழுது கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால் தை தேர் திருவிழா அனைத்தும் பக்தர்கள் இன்றி திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, இதன் காரணமாக நம்பெருமாள் தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக அன்றைய தினம் கருட வாகனத்தில் கருட மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளிப்பார்...
தை தேர் உற்சவ நிகழ்வின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருக் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn