பயணச்சீட்டு கேட்ட டிக்கட் பரிசோதகரை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த நபர் கைது …!
நேற்று மாலை ஏழு மணியளவில் ஏர்ணாகுளத்தில் இருந்து பாட்னா சென்று கொண்டிருந்த ரயிலின் S11 கோச்சில் ஏறியிருக்கிறான் ஒடிஷா, வன்ஜம் பகுதியைச் சேர்ந்த ரஜினிகாந்த். அப்போது ரயிலில் பரிசோதகராக இருந்த வினோத் கண்ணன் என்பவர் ரஜினிகாந்திடம் பயணச்சீட்டு கேட்டிருக்கிறார். அதற்கு பொறுப்பற்ற பதிலை சொன்ன ரஜினியை அடுத்த ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் ரயில் வடக்காஞ்சேரியை நெருங்கிய நேரத்தில் கதவருகே நின்று கொண்டிருந்த வினோத் கண்ணனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறான் ரஜினி. இதை அருகில் இருந்த பெண் பரிசோதகர் ஒருவரும் ரயிலில் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு ஊழியரும் பார்த்திருக்கிறார்கள். திடீரென நடந்ததால் அவர்களால் வினோத்தை காப்பாற்ற முடியவில்லை. பாலக்காட்டில் வைத்து கொலைகாரனை கைது செய்தனர். ரயில்வே போலீசார். கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் கலை ஆர்வம் மிக்கவர் மட்டுமல்ல, நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
மம்மூட்டியின் கேங்ஸ்டர், மோகன்லாலின் புலி முருகன், வில்லாளிவீரன், மங்க்லீஷ், ஹவ் ஓல்டு ஆர் யூ?, பெருச்சாழி, கசின்ஸ், லவ் 24, ஒப்பம், விக்ரமாதித்தன், மிஸ்டர் ஃப்ராடு என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் வினோத். மிமிக்ரி, நாடகம் ஆகியவற்றில் இவரது ஆர்வத்தை கண்ட இவரது பள்ளித் தோழரும் இயக்குனருமான ஆஷிக் அபு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.
தொடர்ந்து தான் அவருக்கு மற்ற படங்களிலும் வாய்ப்புகள் வரத்துவங்கின. ஆனால் சினிமாவில் நிறைய சாதிக்க இருந்தவரை இப்படி அநியாயமான இழந்து விட்டோமே என பிரிவுத் துயரில் தவிக்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது முகநூல் பக்கத்தில் வினோத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் நடிகர் மோகன்லால். கடந்த இருபத்தி எட்டாம் தேதி தான் ஏர்ணாகுளம் அருகேயுள்ள மஞ்ஞும்மல் பகுதியில் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தி குடியேறியிருந்தார் வினோத் கண்ணன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision