ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சியில் நூறு வார்டுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதண்டகுறிசி, மல்லியம்பத்து, முத்தரசநல்லூர் மற்றும் கம்பரசம்பேட்டை ஆகிய கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியாக மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்களது கிராம ஊராட்சிகளில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வசித்து வருகின்றனர்.
கிராம ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் சமூக நலத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், இலவச தொகுப்பு வீடு திட்டம் போன்ற திட்டங்கள் கிடைக்காது என்றும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி, சொத்து வரி உள்ளிட்ட எல்லா வரிகளும் பல மடங்கு உயரும். இதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மிக சிரமம் ஏற்படும். மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் கிராம ஊராட்சிகளை இணைப்பதை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn