எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா கணக்கிற்காக நடக்கிறது- சிவபக்தர்கள் புலம்பல்

எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா கணக்கிற்காக நடக்கிறது- சிவபக்தர்கள் புலம்பல்

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில் மூன்று அமைச்சர்கள் இருந்தும் கணக்கிற்காக நடக்கிறது என சிவபக்தர்கள் புலம்பல்.பக்தர்களின் கண் துடைப்பிற்காக ஆலய கும்பாபிஷேகம் நடைபெறுகிறதா என பக்தர்கள் கேள்வி.

ஆலயம் மற்றும் தெப்பக்குளத்தில் முறையாக புரைமைப்பு செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு...திருவெறும்பூர் என்று பெயர் வர காரணமாக அமைந்த மலைக்கோயில் என்றழைக்கப்படும் திருஎறும்பீஸ்வரர் ஆலயத்தில் ஏப்ரல் ஏழாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலமான எறும்பீஸ்வரர் கோவிலானது காவிரி தென்கரையில் அமைந்துள்ள ஏழாவது சிவ தலமாக உள்ளது.பழமை வாய்ந்த திருக்கோவிலில் மூலவராக எறும்பீஸ்வர் புற்று வடிவிலும், அம்பாள் நறுங்குழல் நாயகி யாகவும் அருள்பாலித்து வருகிறார்.குன்றின் மீது அமைந்துள்ள திருத்தலத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ ஹரிஹரன், ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ சப்தமார்கள், ஸ்ரீ நால்வர், ஸ்ரீ நவகிரகம் ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ செல்வ விநாயகர், வடகயிலாய நாதர் முதலான பரிவார தெய்வங்கள் உள்ளன.

தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. பிரம்ம தீர்த்தம், குமார தீர்த்தம் உள்ள இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,இதனைத் தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏழாம் தேதி மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இந்நிலையில் ஆலய திருப்பணிகளும், அதற்கான பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கோவிலின் தெப்பகுளமானது எவ்வித பராமரிப்பு இன்றி சுற்றுச்சுவர்கள் இடிந்த நிலையிலும், கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்த இந்த ஆலயத்தில் தெப்ப குளத்தை பராமரிக்காமல் திருப்பணிகள் நடைபெற்று வருவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்ததன் பெயரில் ஆலய திருப்பணிகள் நடைபெற்று வந்தன. 

தொல்லியல் கட்டுப்பாட்டு துறையில் இந்த ஆலயத்தில் புனரமைப்பு பணிகள் முறையாக நடைபெறாமல் பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றதாகவும் கண்துடைப்பிற்காக தற்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் இதனால் வரை இந்த ஆலயத்தில் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு, திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்க உள்ள நிலையில் ஆலய கும்பாபிஷேகமானது ஆட்சியின் விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறதா என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision