உணவை வீணடிக்காமல் இருந்தாலே பலரின் பசியை போக்கலாம் -இன்று உலக உணவு தினம் :

உணவை வீணடிக்காமல் இருந்தாலே பலரின் பசியை போக்கலாம் -இன்று உலக உணவு தினம் :

உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் பட்டினியையும் போக்குவது மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 16ம் நாள் உலக உணவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

 ஐக்கிய நாடுகள் சபை துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண் நிறுவனம் 1945 இல் தொடங்கப்பட்டது.  தொடக்க நாளை உலக உணவு நாளாக 1979 லிருந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருளோடு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது அவ்வகையில் 2021 ஆம் ஆண்டு 

"ஆரோக்கியமான நாளை இப்போதே பாதுகாப்பான உணவு" என்பதாகும்.

வளரும் நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது மக்கள் தொகை பெருக்கம், விளை நிலங்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் விலைவாசி உயர்வு தான்.

 இவைதான் மக்களின் உணவுத் தேவையையும் பசியையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.

உலகம் முழுக்க அன்றாடம் பலர் பட்டினியால் மரணிக்கிறார்கள்.

நடப்பு ஆண்டுக்கான உலக பட்டினி இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 135 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.

2000ம் ஆண்டு முதல் இந்திய கணிசமான முன்னேற்றத்தை அடைந்து இருந்தாலும் குறிப்பாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறித்து இன்னும் கவலைப்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.  

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி.

ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள்.

 18 கோடிப்பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் பிரச்சினையால் பாதிக்கப் படுகின்றனர்.

 ஒருபுறம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்கும் பட்சத்தில் நடுத்தர குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு 50 கிலோ உணவை வீணடிப்பதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளது .

தெரிந்தோ தெரியாமல் நாம் வீணடிக்கும் உணவுப் பொருளானது பலரின் பசிக்கு காரணமாகிவிடுகிறது.

 இப்படி வீண் செய்யும் உணவுப் பொருள்களால் பசியால் வாடும் மக்களின் உணவுத்தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும் அதற்கான முயற்சியில் பல தன்னார்வ அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

லாப நோக்கமற்ற மக்கள் பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் அதே சமயம் உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மூன்று தன்னார்வலர்கள் கொண்டு தொடங்கப்பட்டது 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற அமைப்பு.

இப்போது, 7 ஆண்டுகள் நிறைவில் 10 மாவட்டங்களில் பல தன்னார்வலர்களைக்கொண்டு உணவுப் பொருள்களை வீணடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நோ புட் ஃபேஸ்ட் என்ற அமைப்பு மக்களுக்கு உதவி வருகின்றனர்.

பசி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவ்வமைப்பின் நோக்கம். 

திருச்சி நோ ஃபுட் வேஸ்ட் அமைப்பின் இயக்குனர் ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொள்கையில்,

"உலகில் பலர் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் உணவுப் பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே இதற்கான காரணம்.

 மக்களின் பசிப்போக்கும் வகையில் மக்களிடம் மீதமான உணவு பொருட்கள் சேகரித்து பசியால் வாடும் மக்களுக்கு பகிர்ந்து அளித்து வருகின்றோம்.திருமண மண்டபங்கள், விசேஷங்கள் நடைபெறும் இடங்களில் மீதமாகும் உணவை சேகரித்து சாலையோரத்தில் இருப்பவர்கள், உணவு தேவை இருப்பவர்களுக்கு கொடுத்து உதவி வருகின்றோம்.

இதுவரை 87,50,157 மக்களுக்கு உணவுகளை சேகரித்து உதவியுள்ளோம்.

 நாம் வீணடிக்கும் உணவு பொருட்களின் அளவை கட்டுப்படுத்தினாலே பசியால் வாடுவோர் இல்லாத நிலை ஏற்படும்" என்றார்.