வைர விழா ஆண்டை நிறைவு செய்தது திருச்சி விமான நிலையத்தின் பழைய பயணிகள் முனைய கட்டிடம்!

வைர விழா ஆண்டை நிறைவு செய்தது திருச்சி விமான நிலையத்தின் பழைய பயணிகள் முனைய கட்டிடம்!

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை அடிப்படையாகக் கொண்டு,இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களின் முன்மாதிரி விமானநிலையமாக, உலகின் தலைசிறந்த வடிவமைப்புடன், கட்டுமான ஒருங்கிணைப்பு, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் என கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் செலவில் புதிய பயணிகள் முனையம் கட்டப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் பழைய பயணிகள் முனைய கட்டிடம், தற்போது விமானநிலைய இயக்குனர் அலுவலகம் உள்ள கட்டிடமானது 60 ஆண்டுகள் பழமையானது ஆகும். இது பற்றிய பல சுவராசியமான தகவல்களைக் காண்போம்.

Advertisement

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தின் வரலாறானது இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை பின்னோக்கி செல்லும் மிக நீண்ட நெடிய வரலாறு உடையது. தொடக்க காலகட்டங்களில் அதாவது 1930களில் வெறும் புல்தரை மட்டுமே ஓடுபாதையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு வான்வழிப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மட்டுமே இருந்துள்ளதை ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் அப்போதைய பிரிட்டிசார் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையம் மற்றும் பொன்மலை பணிமனையை விமானங்களை பழுது பார்க்கும் தளமாக பயன்படுத்தியுள்ளனர்.

விமான நிலையத்தின் எதிரில் உள்ள விமானங்களைப் பழுது பார்க்கும் கட்டிடமே (ஹேங்கர் - Hanger) இதற்கு சாட்சி. பின்னர் 1948ல் ஏர் சிலோன், 1950ல் இம்பீரியல் ஏர்லைன்ஸ், பின்னர் டாடா ஏர் ஆகியன சிலோனின் கொழும்புவிற்கும் விமானசேவைகளை ஆரம்பித்தன. மெட்ராஸ், திருவனந்தபுரம் என உள்நாட்டு சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் புதிய பயணிகள் முனைய கட்டிடத்தின் தேவை ஏற்பட்டதால் அப்போதைய மத்தியஅரசால் புதிய பயணிகள் முனையம் கட்டப்பட்டு மிகச்சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் (Union Deputy Minister of Civil Aviation) அகமது முஹையுத்தீன் 05/11/1960-ல் திறந்து வைக்கப்பட்டதே இந்த பயணிகள் முனையக் கட்டிடமாகும். இது தற்போது 05/11/2020-ல் வெற்றாகரமாக தனது 60 வயதை நிறைவு செய்துள்ளது.

Advertisement

அன்று திறந்து வைக்கப்பட்ட இந்த கம்பீரமான கருங்கல் கட்டிடமானது, 21/02/2009-ல் திறக்கப்பட்டு, 01/06/2009-ல் பயன்பாட்டுக்கு வந்த தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய பயணிகள் முனைய கட்டிடம் வருவதற்கு முன்பு வரை கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் பயணிகளுக்கு சேவை வழங்கியது. இன்றளவும் விமானநிலைய இயக்குனர் அலுவலகமாகவும், வான்வழிப்போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையாகவும் (ATC - Tower) மற்றும் இதன் இணைப்பு கட்டிடங்களாக ஏற்றுமதி/இறக்குமதி சரக்கக முனைய கட்டிடமாகவும் மற்றும் பல அலுவலகமாகவும் சேவை வழங்கி வருகிறது.

இந்தியாவில் அரிதாக ஒரு சில பயணிகள் முனைய கட்டிடங்கள் மட்டுமே விமானநிலையங்களில் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. உதாரணமாக, ஹைதராபாத்தின் கடைசி நிஜாமான "மீர் உஸ்மான் அலி கான்" 1937ல் கட்டப்பட்ட இன்றளவும் பயன்பாட்டில் இருக்கும், ஹைதராபாத் பேகம்பட் விமானநிலையத்தின் பழைய பயணிகள் முனைய கட்டிடமாகும். அதேபோல், அன்றைய மெட்ராஸ் பிரசிடென்ஸியின் ஆளுனரான "கமலுபூண்டி ஶ்ரீராமுலு நாயுடு" அவர்கள் முயற்சியால் நிலம் ஒதுக்கப்பட்டு, 1948 முதல் 1954 வரை பல்வேறு நிலைகளில் கட்டப்பட்ட மெட்ராஸ் மீனம்பாக்கம் விமானநிலையம் ஆகும். இந்த மீனம்பாக்கம் விமானநிலையமானது இன்றளவும் மாதத்திற்கு சராசரியாக 30,000 மெட்ரிக் டன் ஏற்றுமதி/இறக்குமதி சரக்குகளை கையாளும் சரக்கக முனையமாக கம்பீரமாக செயல்பட்டு வருகின்றது.

இந்த வரிசையில் கம்பீரமான கருங்கல் கட்டிமான திருச்சிராப்பள்ளியின் பழைய பயணிகள் முனைய கட்டிடமும் இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது வரலாற்று பெருமைக்குரியதே. இந்த பயணிகள் முனையத்தின் வழியாக 2009 வரை பயணித்தவர்களுக்கும், தற்போது இங்கு அலுவலக நிமித்தமாக சென்று வருபவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த கருங்கல் கட்டிடத்தின் கம்பீரம் மற்றும் அக்கால கட்டிடக்கலையின் உறுதித்தன்மை.

Advertisement

வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தால்,

இந்த கம்பீரமான பழைய கருங்கல் கட்டிடம்தான், ஏர் சிலோன் ஆக இருந்து பின்னர் பின்னர் ஏர் லங்கா-வாக மாறி தற்போதுள்ள ஶ்ரீலங்கன் விமானநிறுவனத்தின் கொழும்பு ரத்மலானை விமானநிலையத்தில் ஆரம்பித்து தற்போது கொழும்பு பண்டார நாயக்கா விமானநிலையத்தின் விமானசேவைகளைக் கையாண்டது. இது மட்டுமன்றி யாழ்ப்பாணம் மற்றும் மாத்தளை விமானநிலையங்களின் விமானசேவையையும் கையாண்டது.

இம்பீரியல் ஏர்லைன்ஸ், பின்னர் டாடா ஏர், பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ் என பன்னாட்டு அளவில் இந்தியன் ஏர்லைன்ஸின் கொழும்பு, ஷார்ஜா, புஜைராஹ், ராஸ்-அல்-ஹைமாஹ், குவைத் ஆகிய பன்னாட்டு விமானசேவைகளையும், மெட்ராஸ், திருவனந்தபுரம், கோழிக்கோடு, மதுரை ஆகிய உள்நாட்டு சேவைகளையும் கையாண்டது.

இதே கட்டிடத்தை வைத்துதான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸானது துபாய், மற்றும் சிங்கப்பூர் சேவைகளைத் தொடங்கியது. ஏர் ஏசியா கோலாலம்பூர் விமானசேவையைத் தொடங்கியது. மிஹின் லங்கா கொழும்பு விமானசேவையைத் தொடங்கியது.

என்இபிசி மெட்ராஸ், மதுரை விமானசேவைகளைத் தொடங்கியது.

பாராமவுண்ட் ஏர்வேஸ், கிங்பிஷர் ஆகியன மெட்ராஸ் சேவைகளைத் தொடங்கியது.

60 ஆண்டுகளில் இந்த பழைய பயணிகள் முனைய கட்டிடம் கையாண்ட விமானநிறுவனங்கள், இணைத்திருந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானநிலையங்கள் எத்துணை! அடடா! எவ்வளவு வரலாற்று அடையாளங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது இந்த கம்பீரமான கருங்கல் கட்டிடம்?

கிட்டத்தட்ட 85 வருட வரலாற்றைக் கொண்ட திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தில் தனது 60 வருட வரலாற்றுப் பெருமையை தன்னகத்தே கொண்டு, திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்திற்கு மட்டுமன்றி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கும் ஒரு வரலாற்று சான்றாக விளங்குகிறது இந்த கம்பீரமான கருங்கல் கட்டிடம் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விசயம்!

Advertisement