திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாற்றைப் பறைசாற்றும் புதிய அருங்காட்சியகம்

திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாற்றைப் பறைசாற்றும் புதிய அருங்காட்சியகம்

திருச்சி ஜோசப் கல்லூரியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி பிஷப் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னான்டோ அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். கல்லூரி தொடங்கி அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட கல்லுாரியின் முதல் அதிபரும், முதல்வருமான ஆடிபெர்டின் பெயர் அருங்காட்சியகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. 

1844 இல் முதன் முதலில் நாகப்பட்டினத்தில் தூயவளனார் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சிக்கு மாற்றம் செய்து அது முதல் திருச்சியிலேயே இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் 1844-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை கல்லூரி கண்ட வளர்ச்சிக்கு பாடுப்பட்ட கல்லூரி முதல்வர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. ரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு, சர்.சி.வி.ராமன், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கல்லூரிக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள், பத்திரிகைகளில் வந்த செய்தி தொகுப்புகள் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாமின் வருகை, அவர் அளித்த பங்களிப்பு குறித்த புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.

கல்லூரியில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஏழை மாணவர்களுக்கு கல்வி சென்று சேர வேண்டும் என்று உழைத்த அனைத்து கிறிஸ்த்துவ மறைப்பணியாளர்களின் தியாகங்களை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் அவர்கள்குறித்த புகைப்படங்களும் அவர்கள் செய்த சாதனைகளும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் கல்லூரியின் சிறப்பான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் லாலி ஹால், டிக்பை ஹால் போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளின் வரலாற்று குறிப்புகளும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது. அருங்காட்சியகம் குறித்து கல்லூரி துணை முதல்வர் அலெக்ஸ் பகிர்ந்து கொள்கையில், "கல்லூரி முதல்வர் முனைவர் சேவியர் ஆரோக்கியசாமி வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓராண்டு காலமாக இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக அதிக ஆர்வமாக செயல்பட்டுள்ளார்.

அவருடைய எண்ணங்களுக்கு உயிர்தரும் வகையில் கல்லூரியின் பிரெஞ்சு பேராசிரியர் ஹெர்மன் இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டசெயலாக்கத்திற்கு உதவியுள்ளார். இந்த அருங்காட்சியம் கல்லூரி வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பிறகு பொதுமக்கள் அருங்காட்சியகத்தினுள் அனுமதிக்கப்படுவர்" என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn