28 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாக்களிக்க வந்த இளைஞர்

28 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாக்களிக்க வந்த இளைஞர்

வாக்களிப்பது ஜனநாயக கடமை. இந்த கடமையை நிறைவேற்ற எவ்வளவு தூரம் ஆயினும் கடந்து வருவேன் என்று சிங்கப்பூரில் இருந்து தன்னுடைய வாக்கை பதிவு செய்ய புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளார் சத்தியசீலன் என்ற இளைஞர். புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி சேர்ந்த இவர் சிங்கப்பூரில்  பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்  பணியாற்றும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டு தன்னுடைய வாக்கை செலுத்துவதற்காக கடந்த மாதமே வந்திருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, வாக்குரிமை என்பது மட்டுமே நம்மிடம் இருக்கக்கூடிய மிக முக்கிய அதிகாரம் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு என் வாக்கை செலுத்த வேண்டும் என்பதற்காக என் தங்கையின் திருமணத்தைக்கூட  தேர்தல் நேரத்தில் வைக்க சொல்லி  கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் தள்ளி வைத்திருந்தேன்.

பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு  தமிழ் மொழி மீதும் தமிழினம் மீதும் அதிக ஆர்வம் உண்டு. பல்வேறு புத்தகங்கள் தமிழ் மொழி சார்ந்த, தமிழ் இனம் சார்ந்த நூல்களை படித்திருக்கிறேன். அதன் ஈர்ப்பினால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் என்னை மிகவும் ஈர்த்தது. மொழி இனத்திற்கு அப்பாற்பட்டது இயற்கை. அவற்றை பாதுகாப்பதில் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் என்னை முதலில் ஈர்த்தவை.

தேர்தலின் போது 20 நாட்கள் களப்பணியில் இருந்தேன் எங்கள் தொகுதிகளுக்கு நாங்கள் தானே செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்று தொகுதிகளுக்கும் என்னுடைய சொந்த செலவில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயில் மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன். வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி மக்கள் மனதில்  தமிழினத்தை பற்றிய தெளிவான சிந்தனை தோன்ற செய்வதே எங்களுடைய மிக முக்கிய நோக்கமாக நான் கருதி அதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சத்தியசீலன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr